Monday, December 24, 2012

ராஜா மீது சுமத்தப்படும் அபத்தமான குற்றச்சாட்டுக்கள்


ராஜா மீது சுமத்தப்பட்ட சில அபத்தமான குற்றச்சாட்டுக்களும், ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பனவற்றை இப்பதிவில் அலசலாம்.
சில ஆண்டுகளுக்கு முன் எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் குமுதம் இதழுக்கு தந்த பேட்டியில் தன்னுடைய வளர்ச்சியை ராஜா தான் தடுத்தார் என்று கூறியிருந்தார், மேலும் படவாய்ப்பு கிடைக்காததற்கு ராஜா தான் காரணம் எனவும் அப்பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் நடந்தது என்னவெனில், ஈஸ்வரி தான் ராஜாவை அவமானப்படுத்தினார். ”மச்சானைப் பார்த்தீங்களா” பாடலை முதலில் ஈஸ்வரி தான் பாடுவதாக இருந்தது. ஆனால், அதுவரை எம்.எஸ்.வி, ராமமூர்த்தி,   கே.வி. மகாதேவன் போன்றோரிடத்து பாடி வந்த ஈஸ்வரி, அறிமுக இசையமைப்பாளரிடம் பாடுவதை விரும்பவில்லை. அன்னக்கிளி பெரும் வெற்றி அடையும் எனவும், அப்படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் பரவும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மற்றும் ராஜாவின் திறமையையும் அவர் குறைத்து எடைப்போட்டதின் விளைவே ஈஸ்வரியின்  பட வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணம். இது முழுக்க முழுக்க ஈஸ்வரி அவர்களின் செயலால் அமைந்ததேயன்றி, ராஜாவுக்கும் இப்பிரச்சினைக்கும் கடுகளவும் சம்பந்தமில்லை. இச்சம்பவத்தால் ராஜா தன்னுடைய மற்ற பிற படங்களுக்கு அவரை பாட வைக்கவில்லை. அஃதாவது ஈஸ்வரி ராஜாவின் இசையில் பாட விரும்பாததால் அவரை ராஜா அழைக்கவில்லை. ஆரம்பத்தில் இதற்கு வருத்தப்படாத திருமதி.ஈஸ்வரி, சிறிய கால இடைவெளிக்குள் ராஜா தன்னுடைய இசை ராஜாங்கத்தை தமிழ் திரைவுலகில் நிறுவியதால், இவருக்கு பாடல் வாய்ப்புகள் சுத்தமாக குறைந்து பின்னர் ஓரங்கட்டப்பட்டார்.
இவரது மற்றொரு அங்கலாய்ப்பு என்னவெனில் ராஜாவின் மகனான யுவன், இவர் பாடிய பாடலான “கற்பூர நாயகியே கனகவள்ளி” என்ற அம்மன் பாடலை ரீமிக்ஸ் செய்தார் என்பது. ஆனால் அந்த பாடல்1959ல் வெளிவந்த  ஹிந்தி படமான நவராங் படத்தில் வரும் பாடலான ”ஆதோமே சந்திரமாமா”வின்  தழுவல் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அதையே திரு. நாகூர ஹனிபா அவர்கள் பின்னர் “ தீனோரே நியாயமா” என்று பாடினார்.
ஈஸ்வரி மட்டுமில்ல, திருமதி. பி.சுசீலா கூட ராஜாவை அவமானப்படுத்திய சம்பவம் உண்டு. திரு.வி.குமார் அவர்களிடத்து உதவியாளராக ராஜா இருந்த போது, அவர் பாடிய விதத்தில் சில தவறுகளை ராஜா சுட்டிக்காட்டினார். இதனால கோபமடைந்த சுசீலா, ராஜா அந்த இடத்தில் இருந்தால் நான் பாட மாட்டேன் என்று சொல்ல, குமார் அவர்கள் ராஜாவை வெளியேற்றிவிட்டு தான் அப்பாடலை ஒலிப்பதிவு செய்தார். ஆனால் இச்சம்பவத்தால் ராஜா எந்த காழ்ப்புணர்ச்சியும் கொள்ளாமல் அவருடைய முதல் படமான அன்னக்கிளியிலேயே சுசீலாவுக்கு பாட வாய்ப்பு தந்தார். இச்சம்பவம் ராஜா எந்தளவுக்கு பெருந்தன்மையானவர் என்று நமக்கு உணர்த்தும். எனவே ஈஸ்வரி அடிக்கடி சொல்லி வரும்  ”ராஜா தான் என் பட வாய்ப்புக்களை கெடுத்தார்” என்ற கூற்று கடைந்தெடுத்த பொய் என்பதன்றி வேறொன்றுமில்லை.
இதே போல் திரு.டி.எம்.செளந்தரராஜனின் பட வாய்ப்புகள் குறைந்ததற்கு ராஜா தான் காரணம் என்று உலவி வரும் செய்தியும் கடைந்தெடுத்த பொய்யேயன்றி வேறொன்றுமில்லை. ஒரு இசையமைப்பாளர் எவ்வாறு சொல்லி கொடுக்கிறாறோ அந்த விதமாக தான் எந்த பாடகரும் பாட வேண்டும் , அவர் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக இருப்பினும்!!! யுவன் நந்தாவில் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திடம் “முன் பனியா முதல் மழையா” என்ற பாடலை பாட அழைத்த போது அவருக்கு சில இடங்களில் மாற்றம் தேவை என்று விருப்பப்பட்டபோதும் யுவன் கூறிய வாதங்களை ஏற்று எஸ்.பி.பி அவர்கள், யுவன் விரும்பியவாறே பாடி முடித்தார். அவர் நினைத்திருந்தால் தான் சொன்ன மாற்றங்களை அமல்படுத்திய தீர வேண்டும் என்று வற்புறுத்தி அவ்வாறே பாடியிருக்கலாம். ஆனால் அவர் இசையமைப்பாளருக்குரிய மரியாதையை அளித்தார். ஆனால் டி.எம்.எஸ்  அன்னக்கிளியில் ராஜா சொன்னது போல “ஆறு மாசம், ஒரு வருசம்” என்று பாடாமல் ”ஆறு மாதம், ஒரு வருடம்” என்று பாடிய விதம், அவர் தன்னுடைய அனுபவத்தை ஒப்பீடு செய்யும் போது ராஜா சாதாரணமானவர் என்ற கொண்ட மனப்பான்மை தான் காரணம். தன் விருப்பம் போல் தான் பாடுவேன் என்று எண்ணம் கொண்ட எந்த பாடகரையும் எந்த இசையமைப்பாளருக்கும் பிடிக்காது, ஆனால் ராஜா அவருடைய பல படங்களில் (70களில், 80களின் ஆரம்பக் காலங்களில்) டி.எம்.எஸ்ஸை பாட வைத்தார். உதாரணம் நண்டூறுது நரியூறுது, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு,கணக்கு பார்த்து காதல் வந்தது போன்ற பாடல்கள். பின்னர் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்திலும் டி.எம்.எஸ் அவர்களுக்கு வாய்ப்பு தந்தார்.
எனவே ராஜா அவரை உதாசீனப்படுத்திய எல்லோரையும், புறந்தள்ளாமல், அவர்கள் செய்தவற்றை மனதில் வைத்துக்கொள்ளாமல், அவர்கள் புகழ் எனும் கூரையில் ஏற ஏணியாய் திகழ்ந்தார். நான் ஏற்கனவே என்னுடைய முந்தையப் பதிவில் சொன்னது போல், ராஜாவை இகழ்வோர் அனைவரும், அவர்கள் கூறும் இகழ்மொழிகளால் செய்திக்கு வருகின்றனர், ஊடகங்களின் வெளிச்சம் இவர்கள் மேல் படிகிறது. இது தான் உண்மை. மற்ற படி  இவர்கள் சொல்லும் அனைத்தும் கபட மொழிகளே!!!!

2 comments:

  1. Good article which will clear assumptions in many people's mind. Ilayaraja is the King of Music; a composer of his caliber may never be born again to serve the music in its pure form.

    R. Chandrasekar

    ReplyDelete
  2. நீங்கள் சொல்லும் அன்னக்கிளி பாடலில் 'ஆறு மாசம், ஒரு வருஷம் ' என்ற வரியே வராதே ! அந்த சோக பாடலில் 'ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம்' என்று தான் சூழ்நிலைக்கு மாறி வரும்.

    ReplyDelete