Friday, December 21, 2012

ராஜா மீது கோபப்பட காரணம் யாதெனில்....





சில எழுத்தாளர்கள் (சாரு நிவேதிதா, ஷாஜி, ஞாநி), கவிஞர்கள் (வைரமுத்து, பிறைசூடன்) இளையராஜாவை தாக்கி எழுதுவது, குறை கூறி பேட்டி அளிப்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தங்களுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவது போன்ற காரியங்களை நெடுங்காலமாகவே செய்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால், ஒன்று மட்டும் தெளிவாக புலப்படுகிறது. அது என்னவென்றால், ராஜாவைத் தாக்கியோ அல்லது குறை கூறியோ பேசினால் அது உடனடியாக செய்தியாகிறது மற்றும் அவர்களுக்கு அது ஒரு தற்காலிக ஒளி வட்டத்தை தருகிறது.
இப்படிப்பட்ட செய்திகள் வெளியே வந்தவுடன், அவருடைய கோடானுக்கோடி ரசிகர்கள் கொதித்தெழுந்து முகநூல், Orkut, மற்றும் ஏனைய பிற வலைத்தளங்களில் அவதூறுக்கெதிரான மறுப்பு கருத்துக்களை முன்வைக்கின்றனர். கேட்கவா வேண்டும், அவதூறு கூறிய ஆசாமிகளுக்கு ஏற்படும் கொண்டாட்டமும், உள்ள மகிழ்ச்சிக்கும்! அவர்கள் எதிர்ப்பார்த்தது நடேந்தேறிவிட்டது. அது காலம் வரைக்கும் மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றியே நினைப்பே இல்லாமல் இருந்து,  இப்பிரச்சினை மூலம் அவர்களுக்கு தேவைப்பட்ட வெளிச்சம் கிடைக்கிறது.
திரு. ஞாநி அடுக்கடுக்காக ராஜா மீது சுமத்திய  தாக்குதல் ஏவுகணைகளையும், நாகரீகமற்ற சொற்பிரயோகங்களையும் ராஜா கண்டுக்கொண்டதும் இல்லை, அதற்கு, பதில் லாவணி பாடியதும் இல்லை. அதே போல கவிப்பேரரசு என்று தன்னை சொல்லிக் கொள்ளும் திரு. வைரமுத்து அவ்வப்போது நிகழ்த்தும் மறைமுக சொல்லாடல்களுக்கும் இதுவரை எந்த மன்றத்திலும் ராஜா பதில் கூறியது கிடையாது. சமீபத்திய வரவான சீமான், அமீர், செல்வமணி போன்றோருக்கும் அவர் பதிலேதும் கொடுப்பதில்லை.
இப்படி அவர் மெளனியாக உள்ள போதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்கள் விரும்பும் போலி புகழ் கிடைத்துவிடுகிறது. எப்படி? ராஜா ரசிகர்களால் தான். யாரைல்லாம் ராஜா புறந்தள்ளுகிறாறோ, ராஜா ரசிகர்கள் விடாப்பிடியாக தாங்கிப்பிடித்து, அவர்களின் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடி, அவர்களை குஷிப்படுத்துகிறார்கள். செத்தப் பாம்பாய் கிடந்தவர்களுக்கு ரசிகர்கள் உயிர் கொடுக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நமக்கு அவர் இசையை முழுதும் பருகவே இந்த பிறப்பு போதாது எனும் போது, நாம் எதற்காக வெட்டி விஷயங்களுக்காக நம் ஆற்றலை வீணடித்து, வம்பர்களுக்கு இலவச புகழை தர வேண்டும். எத்தனையோ முகந்தெரியாத நபர்களுக்கு தன்னுடைய இசையால்  முகவரி தந்த ராஜா, அவர்கள் தங்களுடைய முகவரியை தொலைக்கும் போதும், மீண்டும் அடையாளம் காணப்பட அவர்களுடைய வசவுகளின் மூலம் உதவுகிறார். இயற்கை தன்னுடைய வளங்களை எல்லாம் அள்ளி அள்ளி தருகிறதே தவிர மனித சமுதாயத்திடம் இருந்து எவ்வித கைம்மாறும் எதிர்ப்பார்ப்பதில்லை, அது போல தான் ராஜாவும். யாருடைய புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் அவர் பொருட்படுத்துவதுமில்லை, கைம்மாறு எதிர்ப்பார்ப்பதுமில்லை.. அவரை வீழ்த்த வேண்டுமென்றால் அந்த இறைவனால் தான் மட்டுமே முடியுமேயன்றி, வேறு யாராலும் முடியாது என்பது திண்ணம்.

No comments:

Post a Comment