Monday, December 31, 2012

ராஜாவால் அடையாளம் பெற்றவர்கள்


ராஜாவின் இசையால் பிரபலமடைந்த முகங்கள் பற்றிய பதிவு இது. அஃதாவது ஒரே ஒரு பாடலின் மூலம் இவர்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். வானொலியில், ஒலி பேழைகளில் சில பாடல்கள் கேட்கும்போது உடனே இவர்கள் முகம் நினைவுக்கு வரும். அதற்கு காரணம் நம்முடைய ராஜாவின் காலத்தால் அழியாத பாடல்கள் தாம். ஒரு பெரிய நடிகருக்கு, நடிகைக்கு அருமையான பாடல்கள் வாய்ப்பதில் ஏதும் வியப்பில்லை, ஆனால் நகைச்சுவை நடிகருக்கோ, குணச்சித்திர நடிகருக்கோ அவ்வாறு அமைந்தால் அது அவர்களின் பாக்கியமே! பெரிய பேனர் இயக்குனர்/தயாரிப்பு நிறுவனம், புகழ் பெற்ற நடிக/நடிகையர் இருந்தால் மட்டுமே ஒத்துக்கொள்ளும் இசையமைப்பாளர்கள்(அறிமுக இசையமைப்பாளர்களும் சேர்த்தி) மத்தியில் ராஜா புதியவர்களுக்கு ஒரு விலாசத்தை கொடுத்தார் என்பது உலகறிந்த சேதி. அப்புதியவர்கள் படங்களில் இடம்பெறும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள்  மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம் பாடல்களை தந்தவர் நம்முடைய இசை ஞானி.
கண்மலர்களின் அழைப்பதிழ் மற்றும் தீர்த்தக் கரை தனிலே

 என்ற பாடல்களில் மூலம் சக்கரவர்த்தி இன்று வரை அறியப்படுகிறார்.
கம்பர் ஜெயராமன்(திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர்) சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன் பாடல் மூலம் பிரபலம்.(படகோட்டுபவர்)

 ராஜிவ் உறங்காத நினைவுகள் படத்தில் வரும் மெளனமே பாடலில் நன்கு அறிமுகம் ஆகிறார். நிழல் தேடும் நெஞ்சங்கள் படத்தில் வரும் இது கனவுகள் விளைந்திடும் காலம் பாடலும் மிக பிரபலம். 

பானுசந்தருக்கு ஓ வசந்த ராஜா

 சுமனுக்கு என்றென்றும் ஆனந்தமே

 பிரதாப் போத்தன் என்றால் உடனே நினைவுக்கு வரும் என் இனிய பொன் நிலாவே என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 மேலும் இப்போது தொலைக்காட்சி தொடர்களில் அதிகம் நடிக்கும் ராஜசேகருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது ”இது ஒரு பொன்மாலை பொழுது”

 நாடகங்களில் இப்போது பிரபலமாக இருக்கும் மற்றொரு பரிச்சிய முகமான அபிஷேக்குக்கு மோக முள் பாடல்கள் ஒரு முகவரியாக இருக்கிறது.

 ஜீப் ஓட்டிக்கொண்டே பாடும் பாடல் என்றால் சட்டென்று நினைவுக்கு வருகிறார் சரத்பாபு செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் மூலம்.

 சின்ன புறா ஒன்று என்றதும் தேங்காய் சீனிவாசன் தெரிகிறார்.

 பூவே செம்பூவே பாடலில் ராதாரவிக்கு கிடைத்த அடையாளம் பல ஆயிரம் படங்களில் நடித்ததற்கு சமானம்.

சிவச்சந்திரன் எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்/இயக்கி இருக்கார் என்றால் யாருக்கும் தெரியாது, ஆனால் அவர் முகம் மக்களுக்கு பரிச்சியமானதற்கு காரணம் உறவுகள் தொடர்கதை பாடலால் தான்.

 ஆசையே காத்துலே தூது விட்டேன் மூலம் இன்று வரை சுபாஷினி மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

 படாபட் ஜெயலட்சுமி என்றதுமே நம் நினைவுக்கு வருவது “நித்தம் நித்தம் நெல்லு சோறு” தான்.

 நடிகை ஷோபாவிற்கு “அடிப் பெண்ணே” பாடல் மிக பிரபலம்.

 Female Solo என்ற genreஐ மிக பிரமாதமாக கையாண்டவர் ராஜா மட்டுமே. இதற்கு தனி பதிவு போடுமளவிற்கு ராஜா கையாண்ட புதுமைகள் ஏராளம்.
நகைசுவை நடிகரான ஜனகராஜூக்கு “காதல் என்பது பொதுவுடைமை”  நிரந்தர அடையாளம்.

 அவ்வண்ணமே ஆறும் அது ஆழம் இல்ல பாடல் சந்திரசேகருக்கு அமைந்தது.

 நடிகர் S.P.B அவர்களுக்கு மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை கொடுத்தார் ராஜா.

 மலையாள நடிகரான காலஞ்சென்ற திலகன் இன்றும் ஒரு பாடலால் பேசப்படுகிறார் என்றால் அது உணருமீ கானம் மூலமே. 

சோமையாஜூலுவுக்கு கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல்.


என் உயிர் தோழன் படத்தில் வரும் இப்பாடலால் மட்டுமே தென்னவன் என்ற நடிகர் இன்று வரை அடையாளம் காணப்படுகிறார்


மேற்சொன்ன நடிகர்கள் இன்று வரை மக்கள் மனதில் சட்டென பாடல்கள் மூலம் நினைவுக்கு வர காரணம் இசை ஞானி இசையமைத்த  சாகா வரம் பெற்ற பாடல்களில் இடம்பெற்றதால் தான். இப்பாடல்களில் நான் சொன்ன பெரும்பான்மையான நடிகர்கள் அவர்கள் நடிப்பு திறனால் பேசப்படவில்லை. ராஜாவின் பாடலே இவர்களை பேச வைத்தது, நிலைக்க வைத்தது. நாளை இவர்கள் எதாவது பேட்டியில் இடம் பெறுகிறார்கள்  அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள் என்றால் இவர்களின் அடையாளமாக இப்பாடல்கள் ஒலிக்கும்.
மேலும் பிரபல நடிகர் எவருக்கேனும் 50 படங்களுக்கும் மேற்பட்டு பணியாற்றியவர் மற்றும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் தந்தவர் என்று இந்திய திரை வரலாற்றை  நோக்கினால் இசை ஞானி மட்டுமே கண்ணுக்கு தெரிவார். முரளி, கார்த்திக், ரஜினி, கமல், ராமராஜன்,மோகன் இந்தப் பட்டியலில் அடங்குவர். அதிலும் முக்கியமாக முரளி, கார்த்திக், ராமராஜன் போன்றோர் , ராஜாவின் பாடல்களால், அதிலும் அவர் குரலில் பாடிய பாடல்களால் தாம் பிரபலமடைந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
நடிகர்களால், இயக்குனர்களால் தயாரிப்பாளர்கள் உருவாக்கப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் ஒரு இசையமைப்பாளர் தயாரிப்பாளர்களை உருவாக்கினார் என்றால் அது சாத்தியப்பட்டது ராஜாவின் இசையால் தான். மேலும் ராஜாவின் இசையை மட்டுமே நம்பி வினியோகஸ்தர்கள் பலர் உருவான வரலாறு  தமிழ் திரையுலகில் தான் உண்டு. மேலும் சில வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாய் மாறியதும் ராஜாவால் தான். இவர்களின் பட்டியல் மீக நீளம். உதாரணமாக கே.பி. பாலு (சின்ன தம்பி தயாரிப்பாளர்), டி. சிவா போன்றோரை சொல்லலாம். இது போன்ற ஒரு நிகழ்வு உலக சினிமாவிலேயே கிடையாது. மேலும் ஹீரோக்களை தோற்றுவித்த ஒரு இசையமைப்பாளர் என்ற பெருமையை ராஜாவே பெறுகிறார். முரளி, கார்த்திக், ராஜ்கிரண், மோகன், ராமராஜன் போன்றவர்கள் கதாநாயகர்களாய் வலம் வந்தார்கள் என்றால் அதற்கு ராஜாவின் இசையன்றி வேறேதுவும் காரணம் இல்லை. 
ஒலிப்பேழையில் வெறும் 1:56 நிமிடங்கள் மட்டுமே வரும் “ஒத்தை ரூபாய் தாரேன்” பாடல் நாட்டுப்புற பாட்டு என்ற படத்திற்கு பெரும் விளம்பரமாக செயல்பட்டதுமன்றி இன்று வரை அப்படத்திற்கு அதுவே அடையாளமாக இருக்கிறது.

இவ்வளவு ஏன் 1991ஆம் ஆண்டு வெளிவந்த படமான தளபதியில் இடம்பெறும் ராக்கம்மா கையை தட்டு பாடலின் இறுதியில் வரும் “குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயும்” வரிகள் அப்போதைய 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் மனப்பாட பகுதியாக இருந்தது அப்பாடலால் என்னுடைய பல நண்பர்கள் ராஜாவால் தான் பொதுத் தேர்வில் அப்படியே பத்து மதிப்பெண் எடுத்தேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்ல கேட்டிருக்கிறேன்.
பொங்கலையும், ஆங்கிலப் புத்தாண்டையும் கதாபாத்திரங்களாய் எடுத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் அவற்றிற்கென பிரத்யேக பாடல்கள் கொடுத்து,


 இன்று வரை ஊடகங்கள், கச்சேரிகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில்  இப்பண்டிகைகள் இந்தப் பாடல்களைக் கொண்டே கொண்டாடும் வகையில் நிலையான சிறப்பு தன்மை வாய்ந்ததாக படைத்த பெருமை இசை ஞானியையே சேரும். 


முத்தாய்ப்பாக சொன்னால் முகம் தொலைந்தவர்களுக்கும் முகவரி தந்த மாண்பு இசை ஞானியை தான் சாரும்

Thursday, December 27, 2012

யுவன் ஏன் கொண்டாடப்பட வேண்டும்?


யுவன் ஏன் கொண்டாடப்பட வேண்டும்?
இன்றைய இளம் இசையமைப்பாளர்களை பட்டியலிட்டு, மிக சிறந்த திறமை, இசை ஆளுமை, இசை நுணுக்கங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அதில் பரிசு தர நாம் தயாரானால், முதல் பரிசு பெற தகுதியானவர் இளையராஜாவின்இளையராஜா யுவன் சங்கர் ராஜா தான் என்பதை நான் மிகவும் பெருமையுடன் சொல்வேன். சரி என்ன தான் சாதித்து விட்டார் இவர் என்ற கேள்விக்கு பதிலே இப்பதிவு!
ராஜாவிடம் இருக்கும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, வேகமாக செயலாற்றும் திறன், கூரிய இசையறிவு ஆகிய அனைத்தும் யுவனிடம் ஒரு சேர அமைந்திருப்பது அவரது பலம். தன்னுடைய தந்தையின் பெருமையை பலர் அறிந்திருந்தாலும், இன்றைய இளஞ்சிறார்கள், யுவன் யுவதிகள் ஆகியோரிடத்து ராஜாவின் இசையறிவை கொண்டு சேர்த்ததில் யுவனின் பங்கு மகத்தானது என்று சொன்னால் அது மிகையன்று. குறிப்பாக 1990களில் பிறந்த குழந்தைகளுக்கு நல்ல இசையென்றால் எது என்று தெரியாமலேயே இருந்தது. புது இசை வடிவம் என்று சொல்லி இவர்களுக்கு புகுத்தப்பட்டதெல்லாம் நஞ்சு அன்றி வேறு இல்லை. இனிமையான இசை இவர்களுக்கு வாய்க்கவில்லை. பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக இந்தியாவிலும், தமிழகத்திலும் புகுந்த பல சங்கதிகளில், புற்றீசலென வந்த ஊடகங்களும் அடக்கம்.  நல்ல இசை என்றால் M TVயில் வரும் இசை மற்றும்  Rap மட்டும் தான் போல என்ற மாயையை இளைஞர்களிடத்து புகுத்தியது இவ்வூடகங்கள்தாம். அப்போது தமிழகத்திலும் அந்த தாக்கம் மெல்ல மெல்ல பரவியது. அருமையான, இனிமையான, மனதை நல்வழிப்படுத்துகிற, சாந்தம் உருவாக்குக்கிற இசையை ராகதேவன் தந்து கொண்டு தான் இருந்தார். ஆனால் இவ்வூடகங்கள் திட்டமிட்டு இவரது இசையை இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேரா வண்ணம் நடந்து கொண்டன. ”தென்றல்தான்  இனிமை என்று காலங்காலமாக இலக்கியங்களிலும், கவிதைகளிலும் சொல்லப்பட்டு வந்த கருத்துக்கு எதிர்மாறாக புயல் தான் சிறந்தது என்ற கருத்து வலுக்கட்டாயமாக மக்கள மனதில் திணிக்கப்பட்ட து. பாவம், என்ன செய்வார்கள் இளைஞர்கள்? புயலால் பேரழிவு தான் என்ற உண்மையை அவர்களுக்கு எடுத்து சொல்ல யாருமில்லை, சொன்னாலும் செவிசாய்க்கவும் அவர்கள் தயாராக இல்லை. படு கேவலமான அலைவரிசையில் அமைக்கப்பட்ட, மனம் மாசுப்படுகிற தன்மை கொண்ட இசையை ஊடகங்கள் அவர்கள் மீது திணித்தன. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் தீமைகள் போல், மனம் மாசுபடுவதால் உண்டாகும் கொடுமைகளும் ஆபத்தானவை. இப்படிப்பட்ட சூழலில் தான் 1996ல் யுவனின் இசை அறிமுகம் ஆனது. அரவிந்தன் படத்தில் வரும்   “ஈர நிலாபாடல் மூலம் எல்லோரையும் கவனிக்க வைத்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையாலும் இவர் ஈர்த்தார். எந்த இளைஞர் பட்டாளம் மட்டமான இசையால் வயப்பட்டிருந்ததோ, அதே இளைஞர் கூட்டத்தை தன்னுடைய இலக்காக கொண்டு இவர் இசையமைத்தார்.   2000 ஆண்டிலிருந்து மெல்ல மெல்ல இவரது ராஜ்யம் விரிவடைந்தது, இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்து கொண்டிருக்கிறார்.
ராஜாவின் பின்னணி இசை திறமையை உலகறியும். ஆனால் அவரது திறமையான இசை, அவரது ரசிகர்கள் என்று அறியப்பட்ட நடுத்தர வயதினரிடம் மட்டும் சென்று அடைந்தது. அவரது இசை, இளைஞர்களில் பெரும்பான்மையானோரிடம் சென்று சேரவில்லை. இப்படிப்பட்ட சூழலில் யுவன் தன்னுடைய படங்களில் ராஜாவின் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள், Theme Music ஆகியவற்றை புகுத்தினார்.
திரிஷா, ஆர்யா நடித்த சர்வம் திரைப்படத்தில், ராஜாவின் சாகா வரம் பெற்றபல்லவி அனு பல்லவிமற்றும் வாழ்க்கைபடத்தில் வரும்  “மெல்ல மெல்ல வந்துபாடல் இசையை யுவன் பயன்படுத்தினார். அந்த பின்னணி இசை, பின்னர் பெரும்பாலான mobile phoneகளில் caller tuneஆக மாறியது. அந்த இசை ராஜாவால் உருவாக்கப்பட்டது என்று தெரிந்த பின் இளைஞர்களுக்கு ராஜா இதையெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறாரா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.
http://www.youtube.com/watch?v=UPzCxvVPiFE



பின்பு 2010ல் வெளிவந்ததீராத விளையாட்டுப் பிள்ளைபடத்தில் ராஜாவின்நெற்றிக் கண்படத்தின் Theme Music பயன்படுத்தி, ராஜாவை இன்றைய இளைஞரிடத்துபாருங்கடா, என் அப்பா எவ்வளவு பெரிய இசை மேதைஎன்று முழங்கினார்.
http://www.youtube.com/watch?v=YOcwBe7_Dhg

சத்தம் போடாதே படத்தில் “ How to Name It” இசைக் கோவையை பயன்படுத்தினார்.
7ஜி ரெயின்போ காலனி படத்தில்ஆசையை காத்துலே தூது விட்டேன்பாடலை பயன்படுத்தினார்.
http://www.youtube.com/watch?v=zCx5EGaTomU

சென்னை 600028 படத்தில் பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு பாடலை பயன்படுத்தினார்.
http://www.youtube.com/watch?v=GcBd4AzQxa0

சரோஜா படத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலையும், ”கோவாவில் அட மச்சான் மச்சான் பாடலில் இடம்பெறும்நாதிரின்னா, நாதிரின்னாஎன்ற Bit பயன்படுத்தினார்.
http://www.youtube.com/watch?v=-bado44xUR8

இவை சில உதாரணங்களே. அவருடைய பல படங்களில் ராஜாவின் பாடல்களையும், புகழ் பெற்ற பின்னணி இசைக் கோவைகளையும் யுவன் இன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவற்றிற்கு மேலும் மெருகூட்டினார்.
இவையெல்லாம் யுவனால் மட்டும் தான் உலகுக்கு தெரிந்ததா, யுவனால் அடையாளம் காட்டப்பட வேண்டிய நிலையிலா ராஜா உள்ளார் என்று உங்களிடத்தில் எழும் கடுங்கோபமான கேள்வி எனக்கு புரிகிறது. நண்பர்களே, நான் அப்படி சொல்லவில்லை, ஆனால் இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் , இசை அமுதங்கள் 1990களுக்குப் பின் பிறந்த பெரும்பாலோனாருக்கு தெரியாதிருந்தது. சிலருக்கு தெரிந்திருந்தது என்றால், அச்சிலரின் பெற்றோர் தான் காரணம். அவர்களின் பெற்றோர், தம் பிள்ளைகளை ஆரோக்கியமான சூழலில் வளர்த்திருக்கிறார்கள் என்பது தான் காரணம். நான் சொல்வது மிகையன்று. நான், சில ஆண்டுகளுக்கு முன், சில நண்பர்களோடு ஒரு தனியார் தொலைக்காட்சியில் ராஜா சம்பந்தப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அந்நிகழ்ச்சியின்  ஒலி/ஒளிப்பதிவிற்கு வந்திருந்த இளம் பாடகி, நாங்கள் பாடவிருந்த பாடல்களை கேட்டு விட்டு, இதையெல்லாம் நான் கேட்டதேயில்லை என்று கூற எனக்கு மிகுந்த வருத்தமே மேலோங்கியது. இளைஞர்கள் என்று இல்லை, ராஜா ரசிகர்களாய் நெடுங்காலமாக இருக்கும் சிலருக்கும் கூட அவருடையபிச்சை பாத்திரம்பாடல் நான் கடவுள் படம் வந்த பின் தான் தெரிந்தது. அவர் அப்பாடலை 1996-97லியே ரமண மாலை ஆல்பத்தில் பாடியுள்ளார்.
ஆனால் இன்றைக்கு நிலை மாறியுள்ளது. ராஜாவின் இத்தகைய சிற்சில பாடல்களை கேட்ட பின்பு, இளைஞர்கள் ராஜாவின் ஏனைய இசை அமுதங்களை, download செய்தாவது கேட்கின்றனர். யுவனின் Trend பின்பற்றி சுப்ரமணியபுரம் படத்தில்சிறு பொன்மணி அசையும்பாடலை இயக்குனர் சசிகுமாரும், பசங்க படத்தில்காளிதாசன், கண்ணதாசன்பாடலை இயக்குனர் பாண்டிராஜும் பயன்படுத்தினர். சிறு பொன்மணி அசையும் பாடல், சுப்ரமணியபுரம் படத்தின் காதல் காட்சிகளுக்கு எத்தகைய இனிமையை கொடுத்தது என்பதை படம் பார்த்தவர்கள் உணர்ந்திருப்பர். அப்பாடல் பல Mobile Service Providerகளின் Caller Tune listல் சேர்க்கப்பட்ட தும் அதற்கு பின்பு தான்.
திரு. M.S.V, திரு. கே.வி. மகாதேவன் போன்றோரின் மைந்தர்கள் திரையுலகில் பிரவேசிக்கவில்லை, அதனால் தான் அவர்களுடைய முத்தான முத்தான பாடல்கள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே தெரியுமேயன்றி மற்ற பிற பாடல்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. யுவன் போன்று அவர்களுக்கும் ஒரு மைந்தன் கிடைத்திருந்தால், அவர்களின் பாடல்கள் எத்தகைய சிறப்பு தன்மை வாய்ந்தவை என்று இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும்.  திரு.எம்.எஸ்.வி பற்றி ராஜாவை தவிர யாரும் இப்போதெல்லாம் பேசுவதில்லை. ஏன், அவரோடு பணியாற்றிய இயக்குனர்களும் கூட பேசுவதில்லை  1992ல் இருந்து நம்முடைய புலனுக்கு சம்பந்தமில்லாத இசையெனும் பெயரால் நஞ்சை பருகி வரும் இளைஞர்களுக்கு அமுதத்தை அளிக்கும் பணியை செய்யும் மகத்தானவர் யுவன் சங்கர் ராஜா அவர்கள்.
யுவனோடு எதிர்காலத்தில் கார்த்திக் ராஜா மைந்தன் யதிஷ்வர் கூட இசைப்பணியில் ஈடுபடும்போது ராஜாவின் இசை பல தலைமுறைகளை கடந்து நிற்கும் என்பது திண்ணம்.
இப்பதிவு உங்களுக்கு கோபத்தை உண்டாக்குவதற்கு எழுதப்பட்டதல்ல. நான் இசைத்தட்டு, ஒலி நாடா விற்பனையில் பல காலம் இருப்பதால், பல வாடிக்கையாளர்களோடு பழகுவதால் இன்றைய வெகுஜன ரசனையின் நாடித்துடிப்பே இப்பதிவு. 
இதற்கெல்லாம் அத்தாட்சியாக  23/12/2012 அன்று கோவையில் நடந்த இசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராஜாவே, K.V. Mahadevan, M.S.V, Ilaiyaraja listல் அடுத்து வருபவர் யுவன் என்று தெரிவித்தார். சுருக்கமாக சொன்னால் ராஜாவின் இசையை இன்றைய சிறார்க்கு, தலைமுறைக்கு எடுத்து சென்றவர் யுவனே!!!