Thursday, December 13, 2012


நான் புரிந்து கொண்ட ராஜா....சிக்கந்தர் உள்ளத்திலிருந்து


என்னுடைய நண்பர் அரவிந்தன் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள்

Synth Music and Live Orchestra பற்றி…..
தாய் பாலுக்கும், புட்டி பாலுக்கும் உள்ள வித்தியாசம் தான்.
இதற்கு யார் காரணம்?
அழகு கெடும் என சில தாய்மார்கள் பாலுட்ட மறுப்பது போல தான் இது. குழந்தை என்னவோ, தாய் பாலைத் தான் விரும்புகிறது, ஆனால் பால் புகட்டுவது தாயின் கையில் தான் உள்ளது. எனவே இதில் ராஜாவை குறை சொல்லி எந்த பயனும் இல்லை. முழுக்க முழுக்க இசை பாழ்பட காரணம் தயாரிப்பாளர்களே.
பொருளாதார நெருக்கடி தான் காரணமா?
இல்லை.
சரி, வெளிநாட்டுக்கு சென்று பல இலட்சங்களைக் கொட்டும் தயாரிப்பாளர்கள் live orchestraவுக்கு செலவு செய்ய கூடாதா?
இது மிகவும் தவறான கருத்து. உண்மையில் வெளிநாட்டில் படம் பிடிக்க ஆகும் செலவு மிக குறைவு. ஆனால் உள்நாட்டில் மிகவும் அதிகம். உதாரணமாக ஊட்டியில் படம் பிடிக்க சென்றால், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.( இதை இடிக்காதே, அதை தொடாதே, இதை நாசம் செய்யாதே என்று.. ). மேலும் படப்பிடிப்புக் கட்டணமும் மிக அதிகம். ஆனால், வெளிநாடுகளில் அப்படி அல்ல. மிக பெரிய செலவு என்றால், கட்டணச் செலவு தானேயன்றி வேறு ஒன்றும் கிடையாது. எனவே பாடல் காட்சிகளுக்கு வெளிநாடு செல்வதால் செலவு அதிகம் என்ற கூற்றை நான் ஏற்க மாட்டேன்.
சரி, மீண்டும் live orchestra வரும் வாய்ப்புகள் உள்ளனவா?
இல்லை, அறவே இல்லை!
ராஜா, அவரது பக்கபலமான இசைக்குழுவை பயன்படுத்தாமல், ஹங்கேரி இசைக்குழுவை நாடுவது ஏன்?
 இசை கலைஞர்களுக்கு வயது ஆகிவிட்டமையால் அவரது notesக்கு தகுந்தபடி, இம்மி பிசகாமல் வாசிக்க இயலவில்லை. அப்படியே வாசித்தாலும் ராஜா விரும்பும் இசையை வரவழைக்க, கொண்டு வர நெடு நேரம் ஆகிறது. ஆனால் ஹங்கேரி கலைஞர்கள் கற்பூரம் போன்று இருக்கிறார்கள். அவரது notesக்கு கொஞ்சமும் இம்மி பிசகாமல் அவர்களால் வாசிக்க முடிகிறது, அதுவும் சில மணித்துளிகளில்!! மேலும் Recording Theatre கட்டணம், quality of sound output --- இவை இரண்டும் ஒப்பு நோக்கையில் மேலைநாடுகளில் ஒலிப்பதிவு செய்வதே சாலச் சிறந்தது என்பதே என் கருத்து. இசைக் கலைஞர்கள் மட்டுமல்ல, இப்போதுள்ள பாடகர்களும், ராஜா விரும்புகிற மாதிரி பாட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக, திரு.ஹரிஹரன், பூந்தோட்டம் என்ற படத்தில் வரும் “ மீட்டாத ஒரு வீணை” என்ற பாடலைப் பாட பல மணி நேரம் ஆனது. ஹரிஹரனே இப்படி என்றால், இன்றைய இளம் பாடகர், பாடகிகளைப் பற்றி பேச வேண்டியதில்லை.
ராஜா என்ற பாடகர் பற்றி?
S.P.B, K.J. Yesudoss போன்ற பாடகர்கள் போன்று ராஜாவும் சிறந்த பாடகர் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. தலை சிறந்த பாடகர்கள்  அனைவரும் புகழ் பெற்றிருப்பது ராஜாவால் தான் என்பேன், எப்படியென்றால், அவர்கள் எப்படி பாட வேண்டும் என, எந்த modulation கொடுக்கவேண்டும் என்று நிர்ணயிப்பது ராஜா தான். அவர் எப்படி கற்று கொடுக்கிறாறோ அதை அப்படியே செய்வதால் தான் அவர்களின் பாடல்கள் அவ்வளவு சிறப்பாக அமைகின்றன.
ஆசிரியர்—மாணவர் உறவு போல தான் இதை நான் பார்க்கிறேன். ஆசிரியர் கற்று கொடுக்காவிட்டால் ஒரு மாணவனால் எங்கனம் சிறப்பாக செயல்படமுடியும்? ஒரு மாணவன் எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பாக இயங்குகிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அம்மாணவனின் ஆசிரியரின் பங்கு உள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது. குருவை மிஞ்சிய சிஷ்யன்
என்ற சித்தாந்தில் எனக்கு எப்பவும் உடன்பாடு கிடையாது.
S.P.B, K.J.Yesudoss போன்றோரை தான் அவர் நம்பியுள்ளார் என்ற பேச்சு வந்த போது, ’பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே பாடினார், சரியாக சொன்னால் இனிமையாக பாடினார் என்பதே உண்மை. வேண்டுமென்றே வம்படியாக அவர் பாடவில்லை,
அப்படத்திற்கு அவ்வாறான சூழ்நிலை அமைந்திருந்ததால் அவ்வாறு செய்தார். நாயகன் சுதாகர், rustic setting, கதை களம் போன்றவை மிக பிரமாதமாக ராஜாவின் குரலுக்கு பொருந்தியது. அவரது குரலில் ஒரு பாடலேனும் படத்தில் இடம்பெற வேண்டுமென பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பிடிவாதம் பிடித்த காலம் தமிழ் திரையுலகில் இருந்தது.
இரகுமான் போன்று ராஜா புது குரல்களை அறிமுகப்படுத்தவில்லையே?
யாரை ரகுமான் அறிமுகப்படுத்தினார் என்று சொல்லமுடியுமா?
ஹரிஹரன்…..
ஹரிஹரனை ஹிந்தியிலிருந்து தமிழுக்கு அவர் கூட்டி வந்தார். அப்படி பார்த்தால் திருமதி.லதா மங்கேஷ்கர், திருமதி. ஆஷா போன்ஸ்லே போன்றோரை தமிழுக்கு அழைத்து வந்தவரே ராஜா தான். அதனால், இவர்களை ராஜா தான் அறிமுகப்படுத்தினார் என்று சொல்லமுடியுமா, நண்பரே?
 உமா ரமணன், சுஜாதா, உன்னிமேனன், கார்த்திக்,விஜய் ஜேசுதாஸ் போன்றோரை ராஜா தான் அறிமுகம் செய்தார். மின்மினியை ராஜா தான் ‘ உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்’ என்ற படத்தில் ‘மாலை சந்திரன்’ பாடலின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஹரிஹரனும் ரகுமானால் அறிமுகம் ஆனவர் அல்ல. இரகுமான், பிரபலமடைந்தவர்களின் குரலை பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.
சித்ராவை யார் அறிமுகப்படுத்தியது? ராஜா தானே.
திரைப்படங்களில் மிக சிறந்த Female Solo பாடல்களை கொடுத்தவர் என்றால் அது ராஜாதான். Female Solo விற்கு தனி மரியாதையை ஏற்படுத்தியவர் ராஜா என்றால் அது மிகையாகாது.
தென்னிந்தியாவில் கொடி கட்டிய ராஜா, வடக்கே(ஹிந்தியில்) சோபிக்கவில்லை என்ற கூற்று பற்றி?
வடக்கே, குறிப்பாக மும்பையில், பிற மாநிலத்தவரை ஏற்றுக் கொள்ள ஒரு சுணக்கம் அக்காலக்கட்டத்தில் இருந்தது. இசைத் துறை என்றில்லாமல் எல்லாத் துறைகளிலும் அப்போக்கு இருந்தது. கமல், ரஜினி போன்றோரும் ஹிந்தி படவுலகில் சோபிக்க முடியாதது(அ) தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் போனதின் காரணம், அங்கே நிலவிய மாற்றாந்தாய் மனநிலை தான்! இதில் ராஜாவும் விதிவிலக்கு அல்ல. இப்போது அவ்வாறான சூழ்நிலை இல்லை, எனவே ராஜாவின் இசையை குறை சொல்ல முடியாது, ராஜா தமிழ்நாட்டை சார்ந்தவர் என்பது தான் குறை.

பல முன்னணி இயக்குனர்கள் ராஜாவை விட்டு சென்றது பற்றி?
அந்த இயக்குனர்கள் சாதாரணர்களாய் இருந்து முன்னணி இயக்குனர்களாய் மாறியதற்கு ராஜாவே காரணம். அந்த இயக்குனர்கள் மிக திறமையானவர்களாய்  இருக்கலாம், ஆனால் அவர்களின் திறமை பேசப்பட்டதற்கு ராஜாவின் இசையே மூல காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ராஜாவை விட்டு அவர்கள் போன பிறகு  அவர்களின் இப்போதைய நிலை என்ன என்பதையும் யோசிக்க வேண்டும். இவர்கள் மேலே ஏற ராஜாவை ஏணியாக பயன்படுத்திக் கொண்டனர். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தும் விட்டனர். இப்போது இறங்க முடியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜா இசையமைக்கும் பல படங்கள் தோல்வியடைகின்றன (அ) வெளிவராமல் போகின்றன, இதனால் அவருடைய பல பாடல்கள் வெளிவராமல் போகின்றனவே?
அது துரதிர்ஷ்டம் தான். அவருடைய மனநிலை புதியவர்களை தூக்கி விட வேண்டும் என்பதே! மேலும் அவரிடம் கதை சொல்லும் இயக்குனர்கள், முதலில் ஒரு மாதிரி கதை சொல்லி பாடல்களை வாங்கிக் கொண்டு, பின்னர் பட்ஜெட், நடிக நடிகையரின் கால்ஷீட் போன்ற காரணங்களிலால்  முற்றிலும் வேறு மாதிரி எடுப்பதும், படம் தோல்வியடைய அல்லது பாடல் காட்சிகள் பேசப்படாமற் போனதற்கு காரணமாக அமைகின்றன.
FM, Satellite Channels போன்ற ஊடகங்கள் ஒன்றுக்கும் உதவாத பாடல்களை போலியாக ஹிட் ஆக்குவதும், ராஜாவின் அருமையான பாடல்களை கண்டுக்கொள்ளாமல் விடுவதும் ஏன்?
முதலில் இந்த ஊடகங்கள் நேர்மையாக செயல்படவில்லை என்ற உண்மையை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு பாடல் ஹிட் ஆக வேண்டுமென்று இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இப்போது பிரம்ம பியர்த்தனம் செய்கிறார்கள். இவ்வூடகங்களுக்கு பணத்தை அள்ளி இறைத்து ஒன்றுக்கும் பிரயோஜனம் ஆகாத பாடல்களை ஹிட் ஆக்குகிறார்கள். ஆனால் ராஜா அப்படி செயல்படுவதில்லை. ராஜாவிடம் வரும் நிதி நெருக்கடியிலுள்ள தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்  அவ்வாறு செயல்படமுடியவில்லை. ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் ராஜா பல படங்களுக்கு பணம் வாங்காமல் பணி புரிந்துள்ளார், மேலும் பல படங்களுக்கு தன்னுடைய இசைக் கலைஞர்களுக்கு மட்டும்  பணம் பெற்றுக் கொண்டு அவருக்கென்று எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. இப்போன்ற செயல்களை யாரும் திரைவுலகில் யாரும் செய்யமாட்டார்கள் என்பது நிதர்சன உண்மை.


2 comments:

  1. Excellant write up.

    ReplyDelete
  2. Dear Mr.Sikkandar,

    Your write ups about the great composer Mr.Raja Sir is really good and it shows your experience in the Music industry for a long time, it has to be continued for a long time and many more write ups like this are expecting from Raja Sir fans like us and I request you to attend the Ilaiyaraaja Sir Yahoo Group Meetings(http://launch.groups.yahoo.com/group/ilaiyaraaja/, so that we would come know to know more about Raja sir.

    Rgds,
    Ravi
    Dharapuram.

    ReplyDelete