Saturday, February 16, 2013

மக்கள் இசை தந்தாரா, ராஜா?


ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லும்போது, அக்கலைகளில் தலையாயது இசை. ஏனெனில் இசை என்பது எல்லா மக்களின் உணர்விலும் கலந்து இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் தள்ளாத வயதினர் வரை இசை ஒவ்வொருவருடைய வாழ்விலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதுவும் நம் நாட்டில் திரையிசையின் பங்கு எத்தகையது என்று நாம் எல்லோரும் அறிவோம்.எந்தக் கலையும் மக்களிடையே சென்று சேர்ந்தால் தான் அது அதற்குரிய சிறப்பையும் பெருமையையும் பெற முடியும். திரையிசையை மக்கள் இசையாக தந்தவர் நம்முடைய ராஜா அவர்கள். மக்கள் அவருடைய இசையில் தங்களை அடையாளம் கண்டுக்கொண்டார்கள். அதனாலயே ராஜா இமாலய வெற்றி பெற முடிந்தது. அவரின் சில பல பாடல்களைக் கொண்டு அவர் எவ்வாறு அதை சாதித்திருக்கிறார் என்று அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

           1931ல் வந்த காளிதாஸ், தமிழ் திரையுலகில் வந்த முதல் பேசும் படம். அப்போதைய காலக்கட்டத்தில்  தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா போன்றோர் கோலோச்சினர். இவர்களின் பாடல்கள் பெரும்பாலும் கர்னாடக இசையை பின்பற்றி இருந்தது. அதனால் மேல்தட்டு மக்களை மட்டுமே சென்று சேர்ந்தது. திரு.என்.எஸ்.கிருஷ்ணன் டி.எம்.மதுரம் ஜோடி ஜனரஞ்சக பாடல்களைத் தந்தாலும் அவை கீழ்த்தட்டு மக்களையே சென்றடைந்தது. இசையமைப்பாளர்களை எடுத்துக்கொண்டால் சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஜி. ராமனாதன் போன்றோர் முடிசூடா மன்னர்களாய் வலம் வந்தனர். இவர்களும் கர்னாடக இசையையே முன்னிறுத்தினர். பின்னர் வந்த கே.வி.மகாதேவன் அவர்கள் கர்னாடக இசையோடு மெல்லிசை பாடல்களையும் தந்தார். 1952ல் கலைவாணர் அவர்களால் பணம் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட எம்.எஸ்.வி ராமமூர்த்தி ஜோடி  பெரும்பாலும் மெல்லிசை பாடல்களைத் தந்து மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தையும் பெற்றனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி ஜோடி பல நல்ல பாடகளைத் தந்தனர் என்பதை மறுக்க முடியாது. மக்களும் ரசித்தனர். அந்த ரசனையானது பாடல்கள், திரைப்படங்கள் என்ற உறவோடு நின்று போனது. ஆனால் ராஜாவின் இசையில் மக்கள் தங்களை -- தங்கள் காதலை, காமத்தை, கோபத்தை, இயலாமையை, வெற்றிக்களிப்பை,தோல்வியை --- அடையாளப்படுத்திக்கொண்டனர்.கவிக்குயில் படத்தில் ஸ்ரீதேவி, சிவகுமாரிடம் என்னுடைய உள்ளத்தில் இருக்கும் இசையை இசைக்க முடியுமா என வினவ, முதலில் தோற்று பின்னர் அப்பெண்ணின் உள்ளத்தில் இருக்கும் இசையை இம்மிப் பிசகாமல் வாசிப்பார். அப்போது ஸ்ரீதேவி உள்ளத்தில் தோன்றும் பூரிப்பு போன்று, மக்களும் ராஜாவின் இசையானது தங்களின் உள்ளத்தின் ஆழத்தில் ஒளிந்துக்கொண்டிருக்கும் உணர்வுகளைப் பிரதிபலிக்க செய்ததால் புளாங்கிதம் அடைந்தனர்.

எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளிலும் தமிழ் திரைப்படங்கள் வேறொரு பரிமாணத்திற்கு சென்றன. படப்பிடிப்புத் தளங்களை விட்டு, மக்கள் புழங்கும் இடங்களுக்கு நகர்ந்தது அக்காலக்கட்டத்தில் தான். பிரபல எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை திரைவடிவமாக கொண்டுவர படைப்பாளிகள் அப்போது மிகுந்த ஆர்வம் கொண்டனர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சுஜாதா போன்றோரின் படைப்புகள் திரைப்படங்களாய் மக்கள் முன்னர் விரிந்தன. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், புதுமைப்பித்தனின் சிற்றன்னை போன்றவற்றை உதாரணங்களாய் சொல்லலாம். சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்றவை படமாக்கப்பட்டபோது அப்படங்களில் ஜெயகாந்தனே தெரிந்தார். புதினங்களைப் படித்தவர்கள் இது மாதரியான படங்களை ரசிக்க முடியும். ஆனால் பாமர மக்கள், புதினங்கள் பற்றி எந்த விவரமும் அறியாமல் படங்களைப் பார்க்க வரும் போது அவர்களை அப்படங்களின் களத்துக்கு அழைத்துச் செல்ல உயிரோட்டமான இசை தேவை. அதை ராஜா மிக அருமையாக செய்தார். உதாரணத்திற்கு மகேந்திரன் அவர்கள் புதுமைப்பித்தனின் சிற்றன்னை நாவலை உதிரிப்பூக்கள் என்ற திரைக்காவியமாகக் கொண்டுவந்தபோது அதில் ராஜாவே முன்னின்றார். புதுமைப்பித்தன் அவர்களையோ இல்லை வேறு எந்த எழுத்தாளரையோ மட்டம் தட்டுவது அல்ல என் நோக்கம். அவர்களின் எழுத்து வலிமையை தமிழகமே அறியும். அவர்களின் எழுத்து, திரைவடிவம் பெறும்போது உண்டாகும் சூழலையே நான் விளக்க முற்படுகிறேன். சுஜாதாவின் ”கரையெல்லாம் செண்பகப்பூ”வில் ராஜாவின் இசையே இன்று வரை பேசப்படுகிறது. மகேந்திரனின் முள்ளும் மலரும் படம், (திருமதி உமா சந்திரன்) ராஜாவின் இசையில் அடைந்த பிரமாண்டம் எல்லாரும் அறிந்த வரலாறு. அவரின் ”நண்டு”ம் சிவசங்கரியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதே. மக்களால் ஏகோபித்த ஆதரவு பெற்ற புதினங்கள் படமாக்கப்படும்போது, திரைக்கதை மிக சிறப்பாக அமையவேண்டும். அத்திரைக்கதைக்கு இசையமைக்கும் போது அப்புதினங்களின் கருவானது பின்னணி இசை, பாடல்கள் போன்றவற்றால் மக்களுக்கு சிறப்பாக எடுத்து சொல்லப்படவேண்டும் என்ற நோக்கத்தில் ராஜா மிக கவனமாக செயல்பட்டதால் தான், அவரின் இசை இன்று வரை பேசப்படுகிறது. புதினம் படிக்காத எத்தனையோ பேருக்கு அப்புதினங்களின் வாசத்தை நுகர வைத்த பெருமை(திரைப்படங்கள் மூலம்) ராஜாவை சாரும்.

           மனதிலிருக்கும் சொல்லமுடியாத உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தது ராஜாவின் இசையே. அவரின் இசையைப் பற்றி பேச ஆரம்பித்த ஆணும் பெண்ணும் கால ஓட்டத்தில் காதலராய் மாறிய அற்புதமும் உண்டு. இது எப்படி சாத்தியமானது என்று அலசினால், இருவரின் உள்ளங்களிலும் குடிகொண்டிருக்கும், மறைந்துக் கொண்டிருக்கும் ஆழமான, நுட்பமான விடயங்களை இவரின் இசையென்னும் மயிலிறகு வருடி சிலிர்க்க வைத்ததால் உண்டானது என்ற உண்மையை அறியலாம். காதலர்கள் தங்களுக்குள் வார்த்தை பரிமாற்றத்தை நிறுத்தி பாடலால் பேசி கொண்ட அற்புதம் ராஜாவின் இசையால் 80களில் அரங்கேறியது.’காலம் மாறலாம் நம் காதல் மாறுமோ’ பாடல் காதலர்களின் தேசிய கீதமானது. காதலர்களுக்கு அப்போது கிடைத்த பாடல்கள் போன்று இனி எக்காலத்திலும் கிடைக்காது. இன்னும் சொல்ல போனால் காதலர்களின் பொற்காலம் என்று 80களைச் சொல்லலாம். தரிசனம் கிடையாதா, என் மேல் கரிசனம் கிடையாதா? என்று ராஜாவின் குரலில் ஒலிக்கும்  காதலின் இன்ப வலியை காதல் மணம் புரிந்து, பிள்ளை பெற்று, அவர்களுக்கும் திருமணம் செய்த வைத்த பின்னும் உணர முடிகிறதென்றால், அவரின் இசை நம் இசையன்றி வேறேது?

விரகதாபத்துக்கு ”நிலா காயுது நேரம் நல்ல நேரம், நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்” , சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதிக்கும் நெஞ்சுக்கு  ”மனிதா, மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்”, வாழ்க்கையின் நிதர்சன உண்மைக்கு ”கனவு காணும் வாழ்க்கை யாவும், கலைந்து போகும் கோபங்கள்” என்று அடுக்கிக்கொண்டே போகலாம். டீக்கடைகளில் ஒலிக்கப்படும் பாடல்கள், சபாக்களில் இசைக்கப்படும் பாடல்கள், ஆடம்பர கார்கள், பேருந்துகளில் கேட்கப்படும் பாடல்கள், திருமண நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல்கள், கேளிக்கை விடுதிகளில் தழையவிடப்படும் பாடல்கள் என்று பாடல்கள் பாகுபடுத்தப்பட்ட காலங்களில் எல்லா இடங்களிலும் ஒலிக்கப்பட்டு, எல்லா தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டு, கொண்டாடப்பட்ட உன்னதமான இசை ராஜாவுடையது. தன்னுடைய உணர்ச்சிகளுக்கு அவர்களே கம்போஸ் செய்தது போல ராஜாவின் இசையை மக்கள் உணர்க்கிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? மக்களின் உணர்வு நரம்புகளை மீட்டி, அவற்றால் வந்த இசையை கொடுத்ததால் தான்!


          கவியரசர் கண்ணதாசனின் “ போனால் போகட்டும் போடா”, “ வீடு வரை உறவு, வீதி வரை மனைவி” போன்ற பாடல்களை இன்று வரை மக்களால் நினைவுப்படுத்தி பார்க்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் அப்பாடல்கள் மக்களின் வாழ்வாதார நிகழ்வுகளை உரைத்ததனால் தான். கவியரசர் “ஒரு 
கோப்பையிலே என் குடி இருக்கும்” என்று எழுதியது போல், ராஜாவும் “ ரசிகனே என்னருகில் வா” பாடலில் “ தெரிந்ததை நான் கொடுக்கிறேன், தெம்மாங்கு ராகங்களோடு, இதயங்கள் சில எதிர்க்கலாம், எதிர்த்தவர் பின்பு 
ரசிக்கலாம்” என்று பாடினார். சூழலுக்கான பாடல் தான் இது என்றபோதிலும் அவரின் இசை வளர்ச்சியை, அவர் கடந்து வந்த இன்னல்களை இப்பாடல் திறம்பட விளக்கியது.

           ராஜாவின் பாடல்களில் இருக்கும் தனிப்பட்ட முத்திரை அவரின் தனித்துவத்தை அவரை மக்களிடையே மிக எளிதாக இழுத்து சென்றது. இந்தியிலிருந்து வந்து தமிழில் இசையமைத்த எல்லோரிடத்தும் இந்தி சாயல் மிகவும் வெளிப்படையாக அவர்களின் பாடல்களில் தெரியும். குறிப்பாக 1960களில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தப் படங்களில் இசையமைத்த வேதா அவர்கள் ஹிந்தி பாடல்களின் ட்யூன்களை அப்படியே தமிழில் பயன்படுத்தினார். மேலும் ஆங்கிலத்தில் வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பின்னணி இசையே இவரின் பின்னணி இசையாக இருந்தது. தமிழில் ஒரு மாதிரி இசை, மலையாளத்தில் வேறு மாதிரி இசை, கன்னடத்தில், தெலுங்கில், இந்தியில் என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொருவிதமான இசை, ஒவ்வொருவிதமான நடை என்று கம்பீர உலா வந்தார் ராஜா. ஒவ்வொரு மொழிக்கான கலாசாரத்தை அவருடைய பாடல்களில் காணலாம். “தும்பி வா” என்ற பாடலுக்கான மெட்டு தமிழுக்குப் போடப்பட்டிருப்பினும் அதை மலையாள மொழியில் உபயோகப்படுத்திய போது, அங்கு பெருவெற்றி பெற்றது என்றால் அது ராஜா எல்லா மொழி  மக்களின் நாடித்துடிப்பை அறிந்திருந்தார் என்றே அர்த்தம்.மலையாள திரையுலகின் மிக சிறந்த தாலாட்டுப் பாடலாக “அல்லி இளம்பூவோ” என்ற பாடல் இன்று வரை இருக்கிறது. தாத்தா, பேரன் பாசத்தை “உணருமே கானம்” பாடல் போன்று மலையாளத்தில் காண முடியாது. ”உணருமே கானம்” பாடல் மலையாள மக்களிடையே தேசிய கீதமாகவே கொண்டாடப்படுகிறது. இப்பாடல் இல்லாது அங்கு நடைப்பெறும் எந்த இசைக்கச்சேரியும் நிறைவு பெறாது.  அதே போல் பாலு மகேந்திராவின் ’சத்மா’வில் வரும் “ஹே ஜிந்தகி” ஒரு மிக சிறந்த காதல் பாடலுக்கு உதாரணமாக இருக்கிறது. கன்னட மொழியில் “கீதா” திரைப்படமும், தெலுங்கில் “சாகர சங்கமம்” திரைக்காவியமும் ராஜாவின் இசைத்திறமைக்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கூற்றுக்கு இலக்கணமாய்  உள்ளன. எல்லா மொழிகளிலும், அம்மொழிக்கேற்ற சூழலில் இசையமைத்திருந்தாலும் அவர் பின்பற்றிய  பிரத்யேக Pattern அவரைத் தனியாக அடையாளம் காட்டியது.சில நிமிடம் கேட்டவுடனேயே “அட, இது நம்ம ராஜா போட்டது தானே!” என்று மக்கள் அடையாளம் காணும் வண்ணம் இருந்தது. அவரது Patternஐ அவருக்கு முன்பு திரையுலகிற்கு வந்த இசையமைப்பாளர்களும் பயன்படுத்தத் தொடங்கினர். எடுத்துக்காட்டாக “ஜெர்மனியின் செந்தேன் மழையே” பாடலை ஒற்றி சங்கர் கணேஷ் “நெஞ்சிலே துணிவிருந்தால்” படத்தில் “சித்திரமே உன் விழிகள்” பாடலை அமைத்தார். அது மட்டுமன்றி அக்காலக்கட்டத்தில் வந்த நல்ல பாடல்கள் சிலவற்றை பிற இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பினும் அவைகளை ராஜா தான் இசையமைத்திருப்பார் என்ற எண்ணம் பெருவாரியான மக்களிடையே உருவாகக் காரணம், ராஜாவுடைய Patternஐ அவர்கள் பயன்படுத்தியதே காரணம்.

           எம்.எஸ்.வி காலக்கட்டத்தில் Prelude, I interlude & II interlude ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியாக தான்(மிக பெரும்பாலும்) இருக்கும். ஆனால் ராஜா இந்தச் சம்பிரதாயத்தை உடைத்தெறிந்து Preludeக்கு ஒரு இசை, 
I interludeக்கு ஒரு இசை, II interludeக்கு மற்றொரு இசை என்ற மரபை வெற்றிகரமாய் நிலைநாட்டினார்.  அதே போல் பின்னணி இசை என்று எடுத்துக்கொண்டால் கர்ணன், நெஞ்சம் மறப்பதில்லை, புதிய பறவை போன்ற பிரமாண்ட படங்கள் அல்லது பெரிய பேனர் தயாரிப்புகளில் தான் கொஞ்சம் வெளியே தெரியும். ராஜாவின் காலத்தில் யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர், யார் நடிக நடிகையர் என்ற பாகுபாடே கிடையாது. கதை களத்துக்கு பொருத்தமான இசை, சூழலுக்கு தேவையான இசை என்பதே ராஜாவின் தொழில் தர்மமாய் இருந்தது, இருக்கிறது. அவரின் இசையில் கோரஸ் எவ்வாறு அமைந்திருக்கிறது என்று ஆராய்ந்தால் அதிலும் அவர் புகுத்திய புதுமை ஏராளம். கோரஸுக்கென்றே தனிப்பதிவு போடுமளவிற்கு அவர் பல உத்திகளை கையாண்டுயுள்ளார். உதாரணத்திற்கு உல்லாசப் பறவைகள் படத்தில் வரும் “தெய்வீக ராகம், தெவிட்டாதத் தாளம்” பாடலில் வரும் கோரஸ் மற்றும் “அடி ஆடு பூங்குயிலே” பாடலிலும் வரும் கோரஸும் பாமர மக்கள் பாடினால் எப்படியிருக்குமோ அவ்வாறே அமைந்தது. அவருக்கு முந்தையக் காலக்கட்டத்தில் கோரஸ் என்பது இனிமையாக இருக்கவேண்டும், நல்ல குரல் வளம் இருப்போர் மட்டுமே பாட வேண்டும் என்ற கருத்தில் இசையமைப்பாளர்கள் உறுதியாயிருந்தார்கள். ஆனால் நம்முடைய ராஜா மக்கள் கலைஞர் ஆயிற்றே! எனவே பாமர குரலை முன்னிலைப்படுத்தினார். “அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே”, “மைனா மைனா மாமன் புடிச்ச மைனா” “அண்ணனுக்கு ஜே! காளையனுக்கு ஜே!”, “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்”, “ஆசையைக் காத்துலே தூது விட்டேன்”, “மனிதா மனிதா” போன்றவை சில உதாரணங்கள்.

          கர்னாடக இசைக்குப் பயன்படுத்தப்படும் நாதஸ்வரம், வீணை புல்லாங்குழல், தவில் போன்ற வாத்தியங்களே பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்ட காலங்களில் Cello, Bass Guitar, Acoustic Guitar, Drums போன்ற கருவிகளாலும் சிறப்பானதொரு இசையைக் கொடுக்கமுடியம் என நிரூப்பித்தவர் ராஜா. இக்கருவிகள் மக்களிடையே அடையாளம் காணப்பட்டதும் இவரின் இசையால் தான்.மேலும் அக்காலத்  திரைப்படங்களில் நடிக நடிகையர் அந்த இசைக்கருவிகளை உபயோகப்படுத்துவதாகக் காண்பிப்பார்கள். அதனாலேயே மக்களுக்கு அந்த குறிப்பிட்ட  இசைக்கருவிகள் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிந்தது.ஆனால் ராஜா காலத்தில் Record, Radio போன்ற ஊடகங்களில் கேட்கும் போதே மக்கள் இசைக்கருவிகளை அடையாளம் கண்டுக்கொண்டனர்.  இது  இது  இந்த வாத்தியம் என்று மக்கள் பரிச்சியம் காட்டுகிறார்கள் என்றால், அவர் மக்கள் இசை தந்தார் என்பதால் தான். Light Music என்ற ஒரு அமைப்பு பிரபலமடைந்ததே ராஜாவின் வருகைக்குப் பின்னர் தான். இசையால் பிழைப்பு நடத்த முடியும் என்ற நம்பிக்கையை ராஜாவின் இசை வித்திட்டது என்றால் அது மிகையாகாது. 

          ராஜாவின் இசை சாதி, மத, இனப் பேதமின்றி எல்லாத் தரப்பு மக்களிடையேயும் சென்று சேர்ந்துள்ளது. சிந்து பைரவி போன்ற கர்னாடக இசையை மையப்படுத்தியப் பாடல்களை கிராமத்தினரும் ரசித்தனர். ஒவ்வொரு டீக்கடையிலும் அப்படப்பாடல்கள் ஒலித்தது. அதே போன்று சின்ன கவுண்டர், கரகாட்டகாரன், பதினாறு வயதினிலே போன்று கிராமிய கதைகளைத் தழுவி வந்த பாடல்களும் எல்லா பெருநகரங்களிலும் ரசிக்கப்பட்டது. பல கர்னாடக இசைக்கலைஞர்கள் இப்பாடல்களில் உள்ள இசை நுணக்கங்களை பல ஊடங்களில் சிலாகித்து பேசியுள்ளனர். சுருக்கமாக சொன்னால் இவரது இசை  டீக்கடைகளிலும் ஒலித்தது, அன்றைய சொகுசு ’கார்’ ஆன  MARUTHI 1000லிலும் ஒலித்தது.

          ஒவ்வொருவருடைய வாழ்விலும் தாத்தா, பாட்டி, தாய் தந்தை, மகன், மகள் என்ற உறவுகள் வரும். சில காலங்களுக்குப் பின் இவற்றில் ஏதேனும் சில உறவுகள் மறையலாம், புதியதாகவும் துளிர் விடலாம். ஆனால், காலத்தால் அழியாமல் நம் வாழ்வில் தொன்றுத் தொட்டு ஒன்று வருகிறது, வர முடியும் என்றால் அது நம் ராஜாவின் இசை மட்டும் தான். இவரின் இசை நம் வாழ்வை விட்டு விலகுகிறது என்று சொன்னால் அது நம் ஒவ்வொருவருடைய மறைவின் மூலம் தான் நிகழும் என்பது நிதர்சனம். நான் இவரது இசைக்கு ரசிகன் என்று கூறிக்கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன், கர்வமும் கொள்கிறேன்.