Saturday, January 12, 2013

ராஜா கவிஞர்களைப் புகழச் சொல்கிறாரா?


     ராஜாவுடைய பாடல்களில் அவரை பற்றிய பெருமை தூக்கலாக இருக்கும், இதை வேண்டுமென்றே ராஜா ஊக்குவிக்கிறார் என்ற குற்றச்சாட்டு, சில மூடர்களால் பரப்பப்படுகிறது. அது எந்தளவு கடைந்தெடுத்த பொய் என்பது ஒரு சாமான்யனான எனக்கு புரிந்த உண்மைகளை சொல்லுவதே இப்பதிவு.
     ராஜா அவர்கள் டிசம்பர் 23,2012 கோவையில் நடந்த இசை மாலை நிகழ்ச்சியில், இயக்குனருக்கு சரியாக தமிழ் தெரியாததால், ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு இது என் தாயை பற்றிய பாட்டு என்று சொல்லவும், “சரி, இதுவே இருக்கட்டும்” என்று இயக்குனர் ஆமோதித்ததாக சொன்னார். ஆனால், என்னை பொறுத்தவரை ராஜா இதை விளையாட்டாக சொன்னதாக தான் பட்டது. சரி, சூழலுக்கு வருவோம். படத்தில் 13 வயதே நிரம்பிய பெண், ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். இதற்கு வாலி “சின்னத்தாய் அவள் தந்த ராசாவே” என்று பல்லவி எழுதுகிறார். அஃதாவது சின்ன பெண், 13 வயது பெண், தாயாகிறாள், எனவே தான் சின்னத்தாய் என்ற வார்த்தை இடம்பெறுகிறது. எந்த குழந்தையையும் அவர்தம் பெற்றோர், “ராஜா மாதிரி இருக்கேடா, ராணி மாதிரி இருக்கேடி” என்று தான் கொஞ்சுவார்கள். இது செல்வந்தர்க்கும் பொருந்தும், ஏழைகளுக்கும் பொருந்தும். எனவே தான் “சின்னத்தாயவள் தந்த ராசாவே” என்ற வரிகள் அந்த சூழலுக்கு எழுதப்பட்டது. இதில் எங்கே ராஜாவின் புகழ் பாடப்பெறுகிறது?
     ”நிழல்கள்” படத்தின் சூழலை பார்ப்போமா? ஒரு இளைஞன் இசையமைப்பாளர் வாய்ப்பை தேடி பலவாறு அலைகிறான். அவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது, அவனின் முதல் பாடல் ஒலிப்பதிவாகிறது. அவன் கொண்ட அளவிடாத மகிழ்ச்சியை தான் வாலி அவர்கள் “மடை திறந்து பாயும் நதியலை நான்” என்று எழுதுகிறார். அந்த இசையமைப்பாளன், புது ராகங்களை படைப்பதால் தன்னை ராக  இறைவன் என்று நினைக்கிறான், மேலும் அந்த இசையமைப்பாளன் அவனுடைய ரசிக பட்டாளத்தை தன்னுடைய இசையால் கட்டிவைக்க ஆசைப்படுகிறான். எனவே தான் “ புது ராகங்கள் படைப்பதால் நானும் இறைவனே” மற்றும் “ இசைக்கென இசைகிற ரசிகர்கள் ராஜ்ஜியம் அமைப்பேன், நான்” என்ற வரிகள் இடம்பெறுகிறது. அந்த இசையமைப்பாளன், ராஜாவை அவன் பாடலுக்கு பாட வைக்கிறான். இவ்வரிகள் சூழலுக்கு எழுதப்பட்டதேயன்றி தனி நபர் துதி பாடுவதன்று. இவ்வரிகள் ராஜா மீது வாலி கொண்டிருக்கும் அபரிதமான அன்பை வெளிப்படுத்துகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது  இசையமைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பு தேடி ராஜா பட்ட கஷ்டங்கள்  வாலி மனதில் நிழலாடியதால் அமைந்திருக்கலாம். அஃதாவது  ராஜா போன்றே சந்திரசேகர் கதாபாத்திரம் கடின உழைப்போடு வாய்ப்பு தேடி அலைந்து அலைந்து பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போது அவனது மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்து எழுதப்பட்டதே  அப்படல் வரிகள். பாடல் வரிகள் எழுதும் போது சூழலுக்கு தான் எழுதப்பட்டிருக்கும், எழுதப்படவேண்டும். பின்னர் அப்பாடல் படமாக்கப்படும் போது, பாரதிராஜா இவ்வரிகள் ராஜாவுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது என்று நினைத்து அவரை காட்டியிருக்கலாம். எனவே ராஜா தன்னை புகழ்ந்து கொள்வதற்காக அப்பாடல் வரிகளை எழுத சொன்னார் என்று சொல்வது அபத்தம்.
     பாலுட்டி வளர்த்த கிளி திரைப்படத்திற்கு கொல கொலயா முந்திரிகாய் பாடலில் “வா ராஜா வா” என்ற வரியை கவியரசர் கண்ணதாசன் எழுதினார். அப்போது ராஜா ஏனிந்த வரி என்று வினவ நான் உன்னை வரவேற்கவே இவ்வரி எழுதினேன் என்று சொன்னாராம்.பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு சட்டம் என் கையில் படத்திற்கு ”ஆழகடலில் தேடிய முத்து” பாடலில்  ”எங்க ராஜா கண்ணு,ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு” என்ற வரியை எழுதினார். பிறந்த குழந்தையின் தாலாட்டு பாட்டு போன்ற சூழலுக்கு எழுதப்பட்டதே இப்பாடல். பெற்றோருக்கு அவர்தம் மழலை உலகிலேயே கிடைக்காத பொக்கிஷம் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு. அவ்வியல்பிற்கு சான்றே இவ்வரிகள். கவியரசர் கண்ணதாசன் ராஜாவை புகழ்ந்து வரிகள் எழுதி பிழைக்கவேண்டும் என்ற நிலையில் இல்லை. ஆனால் அச்சூழலுக்கு அவர் வரிகள் ராஜாவுக்கு பொருத்தமானதாக அமைந்ததெனில், அது ராஜாவின் கடின உழைப்பு, கூரிய இசையறிவு, ஆளுமைத்திறன்,அர்ப்பணிப்பு போன்றவற்றை கண்கூடாக கவிஞருக்கு தெரிந்ததால் அவர் ராஜாவை பாராட்டும் விதமாகவும், அங்கீகரிக்கும் வகையிலும் அதே சமயத்தில் சூழலுக்கு பொருந்தும் வகையில் எழுதியிருக்கிறார் என்றே அர்த்தம். மீண்டும் சொல்கிறேன், ராஜாவை துதி பாடவில்லை, அவரின் திறமையை பாராட்டுகிறார். கூச வைக்கும் புகழ் மொழிக்கும், உண்மையான பாராட்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
          ராஜா கையை வைத்தா அது ராங்கா போனதில்லை, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா போன்ற பாடல்களும் சூழலுக்கு எழுதப்பட்டவையே. இவரை புகழ்ந்து பாடப்பெற்ற பாடல் என்றால், வரவும் செலவும் இரண்டுமின்றி வரவும் செலவும் உண்டு, மானும் மீனும் இரண்டுமின்றி மானும் மீனும் உண்டு என்ற வரிகள் எவ்வகையில் ராஜாவுக்கு பொருந்தும்? அது எப்படி இவர் இசையமைத்த பாடல்களில், ஆங்காங்கே ராஜா என்ற சொல் வருகிறது, இவர் விரும்பாமலா அவ்வாறு அமைகிறது என்ற ஐயம் எல்லாருடைய மனதில் எழும். அவர் விருப்பப்படாமலேயே அவ்வாறு அமைந்திருக்கிறதெனில் அது முழுக்க முழுக்க ராஜா மீது கவிஞர்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பின் வெளிப்பாடேயாகும். அவருடைய மேதைமைக்கு கவிஞர்கள் சூடும் புகழ் மாலையே, அவர்கள் எழுதும் வரிகள். ராஜா என்ற பெயர் வரும் பாடல் வரிகளை பெரும்பாலும் வாலி தான் எழுதியிருப்பார். வாலி பிழைப்புக்கு துதி பாடும் வகையறாவை சேர்ந்தவரல்லர். சூழலுக்கு பொருந்தியும், அதே சமயத்தில் “இக்கலைஞனுக்கு இவ்வளவு இசை ஞானமா” என்ற ஆச்சரியத்தையும் குழைத்து எழுதப்பட்டதே சிலரால் புகழ் மொழிகள் என்று சொல்லப்படும் வரிகள்.
     மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற வரிகளுக்கேற்ப, ராஜாவுக்கு புகழ் மாலைகள் விழுகிறது, அவர் மகத்தான, மாபெரும் கலைஞனாக இருப்பதால் தான். முதல் அறிமுகத்திலேயே பால் மரியா போன்ற வெளிநாட்டு இசை கலைஞனை, மேதையை ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒருவர் ஈர்க்கிறார் என்னும் போது நம்மவர், நம் நாட்டினர் எவ்வாறு கொண்டாடுவர்? அதன் வெளிப்பாடே அவர் பெயர் இடம்பெறும் வரிகள். சத்யா படத்தில் வரும் ராகங்கள் தாளங்கள் நூறு, ராஜா உன் பேர் சொல்லும் பாரு என்ற வரிகள் இவ்வகையில் அமைந்தது தான். கவிஞர் வாலி  பத்ரகாளி படத்தில் எழுதிய கண்ணன் ஒரு கைக்குழந்தை, கண்கள் சொல்லும் பூங்கவிதை பாடலில் “ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் உந்தன் சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா” என்ற வரிகள் அவருக்கும் ராஜாவுக்கும் இடையே இன்று வரை தொடரும் பந்தத்தின் தீர்க்கத்தரிசன வரிகளே.
     M.S.V அவர்கள் இசையமைத்த சுகமான ராகங்கள் படத்திற்கு Title Song பாடியவர் ராஜா தான். அந்த இசை மேதை ஏன் ராஜாவை அழைக்கவேண்டும்? எவ்வகையிலாவது ராஜாவின் மேன்மையை, உழைப்பை, எட்டிய உயரத்தை அங்கீகரிக்கும் M.S.Vயின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடே ராஜாவ அவர் பாட அழைத்தது.
     இப்போதிருக்கும் இந்திய இசையமைப்பாளர்களில் “Composer” என்ற அடைமொழி ராஜாவையன்றி வேறு யாருக்கும் பொருந்தாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் “Composer” என்ற பெருமை ராஜாவை தான் சேருமேயன்றி வேறு யார்க்கும் கிடைக்காது. இந்த கம்போஸரின் திறமை மீது கொண்ட அளவிடமுடியாத மரியாதை, மாண்பு, அன்பு, பூரிப்பு போன்றவற்றின் அடையாளமே நான் மேற்சொன்ன பாடல் வரிகள். பரிசில் பெற அரசர்களை புகழ்ந்து பாடும் வரிகளன்று,  மேன்மையான மேதைமை கொண்டோரை தான் பாடுகிறோம் என்று உணர்ந்து அறிஞர்களே தரும் பரிசே இவ்வரிகள்!!!
    
      
    

Sunday, January 6, 2013

இசை கலைஞர்களை ராஜா புறக்கணிக்கிறாரா?


பின்னூட்டங்களின் வாயிலாக என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தும்
நல்ல உள்ளங்களுக்கு என் கோடானுக்கோடி நன்றிகள்.

ராஜா ஏன் தன்னுடைய இசை கலைஞர்களை அவருடைய ஒலி நாடாக்களில், ஒலிப் பேழைகளில் முன்னிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் பொருட்டு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

பல வருடங்களாகவே ஒரு எழுத்தாளர் தன்னுடைய எழுத்துக்களில் ராஜா மீது கொட்டும் நெருப்பு என்னவென்றால், அவர் தன்னுடைய படைப்புகளுக்குரிய Credit அனைத்தையும் அவரே பெற்றுக்கொள்கிறார், அவருடைய இசை கலைஞர்களை அங்கீகரிப்பதில்லை, அவருடைய பாடல்களின்  CD, Cassette, LP Record  போன்றவற்றில் “இசை – இளையராஜா” என்று தான் இருக்கிறதேயன்றி, புல்லாங்குழல் இன்னாருடைய மூச்சு காற்று, கிடார் அன்னாருடைய விரல் வித்தை, வயலின் இவர் தான் வாசித்தார், வீணை மீட்டய பெருமகனார் இவரே என்று யாருடைய பெயர்களையும் போடாமல் அழிச்சாட்டியம் செய்கிறார் என்பதே. வேறு ஒரு இசையமைப்பாளருக்கு சர்வதேச விருது கிடைத்த போது, அவரை பாராட்டி எழுத ஒரு பிரபல வார இதழ் இவரை அணுக, இவரோ அந்த இசையமைப்பாளரை பாராட்டுவதை விட்டு, இளையராஜாவை திட்டுவதற்கு மட்டுமே அக்கட்டுரையை பயன்படுத்திக்கொண்டார். அவர் எடுத்துக்கொண்ட ”திட்டுப் பொருள்” இசை கலைஞர்களை ராஜா புறக்கணிக்கிறார் என்பதே. அவ்விருது பெற்றவர் மட்டுமே தன்னுடைய மகுடத்தில் அனைத்து கற்களையும் பொதித்து அழகு பார்க்கிறார், ராஜா அவ்வாறு இல்லை என்பதே அவரின் வாதம்.

சரி, கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போம். எவ்வளவோ இசை மேதைகளை தமிழ் திரையுலகம் சந்தித்திருக்கிறது. அதில் ஒருவர் 
திரு. எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள். அவருடைய இசைக்குழுவில் பாடகர்கள், பாடகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோருக்கு தெரிந்த ஒரே பிரபலமானவர் திரு. சதன் அவர்களே. இந்த இந்த இசைக்கருவிகளை இன்னார், இன்னார் தான் வாசிக்கிறார்கள் என்பது வெளியுலகத்திற்கு தெரியவில்லை.

மேலும் 1970ல் எம்.எஸ்.வி ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். ஆல்பத்தின் பெயர் M.S.V ORCHESTRATION. இந்த ஆல்பம் HMV நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தில் எந்த இசைக்கலைஞர் பெயரும் வெளியிடப்பவில்லை. மேலும் இசை கலைஞர்களை  In Lay cardல் வெளியிடும் பழக்கம் தொன்று தொட்டு தமிழ் திரைவுலகில் இருந்தது இல்லை. கே.வி. மகாதேவன் இசையமைத்த படங்களில் “உதவி .. புகழேந்தி” என்று போடுவார்கள். அது போல விஸ்வநாதன் இராமமூர்த்தி படங்களில் உதவியாளர்கள் பட்டியலில் ஜி.கே. வெங்கடேஷ் பெயர் இடம்பெற்றது. விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்களில் தாஸ் டேனியல், கோவர்தனம், ஜோஸ்ப் கிருஸ்ணா போன்றோர் பெயரும், இடம்பெற்றிருந்தது. எவ்வளவோ பேர் விஸ்வநாதனிடத்து பணியாற்றியும் அவர் இசைக்குழுவில் அடையாளம் காணப்பட்ட நபர் சதன் மட்டுமே. 

ஆனால் ராஜாவிடத்து நிலைமை வேறு. இதற்கிடையில் ராஜா பெரும்பாலான இசையமைப்பாளர்களிடம் வாசித்து வந்தார், உதவியாகவும் இருந்தார். ராஜாவின் தனித்தன்மை, இசை ஆளுமை, திறமை ஆகியவற்றை அவர் வேலை புரிந்த இசையமைப்பாளர்கள் கண்கூடாக பார்த்தார்கள். அந்த திறமைக்கு சான்றாக திரு.கோவர்தன் இசையமைத்த வரப்பிரசாதம் திரைப்படத்திற்கு மட்டும் Title Cardல் இசை..கோவர்தன், உதவி … ராஜா என்ற அங்கீகாரம் கிடைத்தது . ஆனால் வி.குமாரின் இசையில் வந்த சில பாடல்கள் ராஜாவே இசையமைத்தது. ஆனால் ராஜாவின் பெயர் அப்படங்களின் Title Cardல் வெளிவரவில்லை. சினிமா துறை அவ்வாறு தான் இருந்தது.. இவ்விதமான School of Thought இருந்த காலத்தில் பணியாற்றிய ராஜா, தனி இசையமைப்பாளர் ஆன பின் தனக்கென ஒரு பிரத்யேக இசைக்குழுவை அமைத்துக்கொண்டார்.

‘Guitar           --- Mr.Sadanandam, Mr.Sasidhar
Tabla            --- Mr.Prasad,
Violin            --- Mr. Prabakar, Mr. Juddy
Keyboard         --- Mr. Viji Manuel
Drums           --- Mr. Purushothaman
Cello            --- Mr.Sekar
Flute            --- Mr. Napolean
Other Instruments   -- Mr.Jaycha Singaram
Chrorus          -- Mr.Saibaba,.
Other Help        -- Mr.Sundarrajan
போன்றோர் மேற்சொன்ன இசைக்கருவிகளோடு அடையாளம் காணப்பட்டார்கள். மேலும் அக்காலக்கட்டத்தில் பாடல் கேட்பதென்றால் பெரும்பாலானோருக்கு வாய்த்த, வயப்பட்ட ஒரே ஊடகம் வானொலி தான். InLay Cardல் இவர்கள் பெயர் இல்லாமல் இருந்தபோதே இக்கலைஞர்களை தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள், இயக்குனர்கள் அடையாளம் கண்டுக்கொண்டனர். 

மேலும் மக்களுக்கு வானொலி கேள்வி ஞானத்திலேயே எந்தெந்த இசைக்கருவிகள்,  பாடல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அடையாளம் கண்டுக்கொண்டார்கள். இது ராஜாவுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. புல்லாங்குழல் எது, வீணை எது, கிடார் எது, சிதார் எது என்று மக்கள் அடையாளம் கண்ட காலம் ராஜாவின் இசை பிரவேசத்திற்கு பின்பே. சரி, திரை கலைஞர்களுக்கு, திரை உலகு சம்பந்தப்பட்டவர்களுக்கு இக்கலைஞர்களை தெரியும், மக்களுக்கு தெரிந்ததா என்ற நியாயமான கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ராஜாவின் பாடல்களில் எல்லாவிதமான இசைக்கருவிகளும் பயன்படுத்தும் போது அவர் தனி தனியாக இவர் தான் இசைத்தார் என்று வெளியிடவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட கலைஞரின்  Solo Performance வரும்போது, அக்கலைஞரின் பெயரை முன்னிறுத்துவதில் ராஜா முன்னோடியாக இருந்திருக்கிறார். 

உதாரணமாக 1981ல் வெளிவந்த ராஜ பார்வை படத்தின் Recordல் வயலின் கலைஞர் திரு. வி.எஸ். நரசிம்மன்  பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும் புதிர் என்ற படத்தில் வரும் முதல் முத்தம் தான் என்ற பாடலின் Instrumental Version வாசித்தவரான திரு.சந்திரசேகர் ( திரு.புருஷோத்தம் அவர்களின் சகோதரர்) அவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.அவரின் பெயர் செல்வி படத்தில் வரும் இளமனது பாடலின் Instrumental Versionக்கும் இடம்பெற்றிருந்தது 

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் Band Music, தில்லானா மற்றும் நாதஸ்வரம் ஆகியவற்றை வாசித்த மதிப்பிற்குரிய சேதுராமன் மற்றும் பொன்னுசாமி ஆகியோரின் பெயர் அப்படத்தின்  Title cardல் இடம்பெற்றது ஆனால் இப்படத்தின் 78 rpm (Revolutions per minute) Columbia Record மற்றும்  45 rpm Angel Recordல்  இவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் 1981ல் இசை ஞானியின் இசையில்  வெளிவந்த கோயில் புறா படத்தின் Recordல் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி அவர்களின் பெயர் வெளிவந்தது.   

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் 1986ல் வெளியான “How to Name It” ஆல்பத்தில் இசை கலைஞர்களின் முழுப்பட்டியல் இருந்தது.


 மேலும் “Nothing But Wind” ஆல்பத்தில் புல்லாங்குழல் கலைஞர் செளராச்சியா பெயரும் இடம்பெற்றிருந்தது.

 என்ன சொல்ல வருகிறேன் என்றால், பாடல்கள் அல்லாமல் வெறும் இசைக்கருவிகளைக் கொண்டே நிகழ்த்தப்படும் எந்தவொரு arrangementக்கும் ராஜா அந்த கலைஞர்களுக்குரிய மரியாதையை செய்ய தவறியதில்லை. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்பேர்ப்பட்ட திறமையான இசைக்கலைஞரும், ராஜாவின் இசைக்குறிப்புக்களையே (Notes) வாசிக்கிறார், அந்த Notesக்குரிய இசை வடிவம், ஒலி அளவு ஆகியவற்றை கொண்டு வர மெனக்கெடுபவர் ராஜா மட்டுமே. அந்த இசை வடிவத்தை இன்னார் தான் கொண்டு வருவார் என்று தீர்மானிப்பவரும் ராஜா தான். எனவே அவர் கலைஞர்களை அங்கீகரிப்பதில்லை என்ற பொய் வாதம் எடுபடாது. அவ்வாறு அங்கீகாரம் கிடைப்பதால் தான் அன்னக்கிளியில் அவரோடு இணைந்து பணியாற்றிய இசை வல்லுனர்கள் இன்று வரை அவரோடு தொடர்கிறார்கள்.

இப்போதுள்ள இசையமைப்பாளர்களுக்கு தனியாக, பிரத்யேகமான இசைக்குழு என்ற ஒன்று கிடையாது, எனவே Cassette, CD Cardகளில் அவர்களுக்கு வாசிக்கும் நபர்களின் பெயரை வெளியிடுகின்றனர். அதுவும் அக்கலைஞர்கள், இசையமைப்பாளரின் “Notes”க்கு வாசிப்பதில்லை. உதாரணத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் என்ன செய்வேன் என்றால் கிடார் வாசிக்க வரும் நபரிடம், ”தன் தனா, லா லா லே ரம் பம் பம்” என்று பாடிக் காட்டி, இதற்கு வாசிக்க வைப்பேன். அவ்வாறு வாசித்தப்பின் அதை கணினியில் மிக்ஸ் செய்து, பவுடர், பூ, மை எல்லாம் இட்டு ஒரு மாதிரி output வர வைப்பேன். எனவே அந்த கிடார் கலைஞனின் பெயரை நான் வெளியிட வேண்டும்.

ஆனால், ராஜா அப்படியல்ல, என்னென்ன வாத்திய கருவிகள் வேண்டும், எந்த ஒலி வடிவம் வேண்டும், எந்த கால அளவுக்குள் அவை இருக்க வேண்டும் போன்ற மொத்த சமாச்சாரங்களையும் தீர்மானித்து அதற்குரிய Notes எழுதி, அதை முன்னின்று மேற்பார்வையிட்டு, ஒலிப்பதிவு வரை முடித்து வைப்பவர் ராஜா அவர்கள். 

மேலும் அவர் 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் ஜெயா டி.வி.க்காக நடத்திய நிகழ்ச்சிகளில் மேடையில் ஒவ்வொரு இசை கலைஞரின் பங்களிப்பையும், அவர்களின் சிறப்பையும் எடுத்துரைத்தார். அவர்கள் எவ்வளவு ஆண்டுகள் அவரிடம் பணியாற்றுகிறார்கள்  என்பதையும் உரைத்தார். தம்முடைய கலைஞர்கள் மட்டுமன்றி, ஹங்கேரி மட்டும் இங்கிலாந்து நாட்டு கலைஞர்களையும், அவர்களின் மேன்மையையும் விலாவாரியாக மேடைகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் அவர் என்றும் கூற தவறுவதில்லை.

இப்படிப்பட்டவரா  இசை கலைஞர்களை புறக்கணிக்கிறார், கவுரவிக்க தவறுகிறார் என்று சொல்கிறார்கள்? முடிவை உங்கள் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன்.