Saturday, January 12, 2013

ராஜா கவிஞர்களைப் புகழச் சொல்கிறாரா?


     ராஜாவுடைய பாடல்களில் அவரை பற்றிய பெருமை தூக்கலாக இருக்கும், இதை வேண்டுமென்றே ராஜா ஊக்குவிக்கிறார் என்ற குற்றச்சாட்டு, சில மூடர்களால் பரப்பப்படுகிறது. அது எந்தளவு கடைந்தெடுத்த பொய் என்பது ஒரு சாமான்யனான எனக்கு புரிந்த உண்மைகளை சொல்லுவதே இப்பதிவு.
     ராஜா அவர்கள் டிசம்பர் 23,2012 கோவையில் நடந்த இசை மாலை நிகழ்ச்சியில், இயக்குனருக்கு சரியாக தமிழ் தெரியாததால், ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு இது என் தாயை பற்றிய பாட்டு என்று சொல்லவும், “சரி, இதுவே இருக்கட்டும்” என்று இயக்குனர் ஆமோதித்ததாக சொன்னார். ஆனால், என்னை பொறுத்தவரை ராஜா இதை விளையாட்டாக சொன்னதாக தான் பட்டது. சரி, சூழலுக்கு வருவோம். படத்தில் 13 வயதே நிரம்பிய பெண், ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். இதற்கு வாலி “சின்னத்தாய் அவள் தந்த ராசாவே” என்று பல்லவி எழுதுகிறார். அஃதாவது சின்ன பெண், 13 வயது பெண், தாயாகிறாள், எனவே தான் சின்னத்தாய் என்ற வார்த்தை இடம்பெறுகிறது. எந்த குழந்தையையும் அவர்தம் பெற்றோர், “ராஜா மாதிரி இருக்கேடா, ராணி மாதிரி இருக்கேடி” என்று தான் கொஞ்சுவார்கள். இது செல்வந்தர்க்கும் பொருந்தும், ஏழைகளுக்கும் பொருந்தும். எனவே தான் “சின்னத்தாயவள் தந்த ராசாவே” என்ற வரிகள் அந்த சூழலுக்கு எழுதப்பட்டது. இதில் எங்கே ராஜாவின் புகழ் பாடப்பெறுகிறது?
     ”நிழல்கள்” படத்தின் சூழலை பார்ப்போமா? ஒரு இளைஞன் இசையமைப்பாளர் வாய்ப்பை தேடி பலவாறு அலைகிறான். அவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது, அவனின் முதல் பாடல் ஒலிப்பதிவாகிறது. அவன் கொண்ட அளவிடாத மகிழ்ச்சியை தான் வாலி அவர்கள் “மடை திறந்து பாயும் நதியலை நான்” என்று எழுதுகிறார். அந்த இசையமைப்பாளன், புது ராகங்களை படைப்பதால் தன்னை ராக  இறைவன் என்று நினைக்கிறான், மேலும் அந்த இசையமைப்பாளன் அவனுடைய ரசிக பட்டாளத்தை தன்னுடைய இசையால் கட்டிவைக்க ஆசைப்படுகிறான். எனவே தான் “ புது ராகங்கள் படைப்பதால் நானும் இறைவனே” மற்றும் “ இசைக்கென இசைகிற ரசிகர்கள் ராஜ்ஜியம் அமைப்பேன், நான்” என்ற வரிகள் இடம்பெறுகிறது. அந்த இசையமைப்பாளன், ராஜாவை அவன் பாடலுக்கு பாட வைக்கிறான். இவ்வரிகள் சூழலுக்கு எழுதப்பட்டதேயன்றி தனி நபர் துதி பாடுவதன்று. இவ்வரிகள் ராஜா மீது வாலி கொண்டிருக்கும் அபரிதமான அன்பை வெளிப்படுத்துகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது  இசையமைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பு தேடி ராஜா பட்ட கஷ்டங்கள்  வாலி மனதில் நிழலாடியதால் அமைந்திருக்கலாம். அஃதாவது  ராஜா போன்றே சந்திரசேகர் கதாபாத்திரம் கடின உழைப்போடு வாய்ப்பு தேடி அலைந்து அலைந்து பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போது அவனது மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்து எழுதப்பட்டதே  அப்படல் வரிகள். பாடல் வரிகள் எழுதும் போது சூழலுக்கு தான் எழுதப்பட்டிருக்கும், எழுதப்படவேண்டும். பின்னர் அப்பாடல் படமாக்கப்படும் போது, பாரதிராஜா இவ்வரிகள் ராஜாவுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது என்று நினைத்து அவரை காட்டியிருக்கலாம். எனவே ராஜா தன்னை புகழ்ந்து கொள்வதற்காக அப்பாடல் வரிகளை எழுத சொன்னார் என்று சொல்வது அபத்தம்.
     பாலுட்டி வளர்த்த கிளி திரைப்படத்திற்கு கொல கொலயா முந்திரிகாய் பாடலில் “வா ராஜா வா” என்ற வரியை கவியரசர் கண்ணதாசன் எழுதினார். அப்போது ராஜா ஏனிந்த வரி என்று வினவ நான் உன்னை வரவேற்கவே இவ்வரி எழுதினேன் என்று சொன்னாராம்.பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு சட்டம் என் கையில் படத்திற்கு ”ஆழகடலில் தேடிய முத்து” பாடலில்  ”எங்க ராஜா கண்ணு,ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு” என்ற வரியை எழுதினார். பிறந்த குழந்தையின் தாலாட்டு பாட்டு போன்ற சூழலுக்கு எழுதப்பட்டதே இப்பாடல். பெற்றோருக்கு அவர்தம் மழலை உலகிலேயே கிடைக்காத பொக்கிஷம் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு. அவ்வியல்பிற்கு சான்றே இவ்வரிகள். கவியரசர் கண்ணதாசன் ராஜாவை புகழ்ந்து வரிகள் எழுதி பிழைக்கவேண்டும் என்ற நிலையில் இல்லை. ஆனால் அச்சூழலுக்கு அவர் வரிகள் ராஜாவுக்கு பொருத்தமானதாக அமைந்ததெனில், அது ராஜாவின் கடின உழைப்பு, கூரிய இசையறிவு, ஆளுமைத்திறன்,அர்ப்பணிப்பு போன்றவற்றை கண்கூடாக கவிஞருக்கு தெரிந்ததால் அவர் ராஜாவை பாராட்டும் விதமாகவும், அங்கீகரிக்கும் வகையிலும் அதே சமயத்தில் சூழலுக்கு பொருந்தும் வகையில் எழுதியிருக்கிறார் என்றே அர்த்தம். மீண்டும் சொல்கிறேன், ராஜாவை துதி பாடவில்லை, அவரின் திறமையை பாராட்டுகிறார். கூச வைக்கும் புகழ் மொழிக்கும், உண்மையான பாராட்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
          ராஜா கையை வைத்தா அது ராங்கா போனதில்லை, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா போன்ற பாடல்களும் சூழலுக்கு எழுதப்பட்டவையே. இவரை புகழ்ந்து பாடப்பெற்ற பாடல் என்றால், வரவும் செலவும் இரண்டுமின்றி வரவும் செலவும் உண்டு, மானும் மீனும் இரண்டுமின்றி மானும் மீனும் உண்டு என்ற வரிகள் எவ்வகையில் ராஜாவுக்கு பொருந்தும்? அது எப்படி இவர் இசையமைத்த பாடல்களில், ஆங்காங்கே ராஜா என்ற சொல் வருகிறது, இவர் விரும்பாமலா அவ்வாறு அமைகிறது என்ற ஐயம் எல்லாருடைய மனதில் எழும். அவர் விருப்பப்படாமலேயே அவ்வாறு அமைந்திருக்கிறதெனில் அது முழுக்க முழுக்க ராஜா மீது கவிஞர்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பின் வெளிப்பாடேயாகும். அவருடைய மேதைமைக்கு கவிஞர்கள் சூடும் புகழ் மாலையே, அவர்கள் எழுதும் வரிகள். ராஜா என்ற பெயர் வரும் பாடல் வரிகளை பெரும்பாலும் வாலி தான் எழுதியிருப்பார். வாலி பிழைப்புக்கு துதி பாடும் வகையறாவை சேர்ந்தவரல்லர். சூழலுக்கு பொருந்தியும், அதே சமயத்தில் “இக்கலைஞனுக்கு இவ்வளவு இசை ஞானமா” என்ற ஆச்சரியத்தையும் குழைத்து எழுதப்பட்டதே சிலரால் புகழ் மொழிகள் என்று சொல்லப்படும் வரிகள்.
     மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற வரிகளுக்கேற்ப, ராஜாவுக்கு புகழ் மாலைகள் விழுகிறது, அவர் மகத்தான, மாபெரும் கலைஞனாக இருப்பதால் தான். முதல் அறிமுகத்திலேயே பால் மரியா போன்ற வெளிநாட்டு இசை கலைஞனை, மேதையை ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒருவர் ஈர்க்கிறார் என்னும் போது நம்மவர், நம் நாட்டினர் எவ்வாறு கொண்டாடுவர்? அதன் வெளிப்பாடே அவர் பெயர் இடம்பெறும் வரிகள். சத்யா படத்தில் வரும் ராகங்கள் தாளங்கள் நூறு, ராஜா உன் பேர் சொல்லும் பாரு என்ற வரிகள் இவ்வகையில் அமைந்தது தான். கவிஞர் வாலி  பத்ரகாளி படத்தில் எழுதிய கண்ணன் ஒரு கைக்குழந்தை, கண்கள் சொல்லும் பூங்கவிதை பாடலில் “ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் உந்தன் சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா” என்ற வரிகள் அவருக்கும் ராஜாவுக்கும் இடையே இன்று வரை தொடரும் பந்தத்தின் தீர்க்கத்தரிசன வரிகளே.
     M.S.V அவர்கள் இசையமைத்த சுகமான ராகங்கள் படத்திற்கு Title Song பாடியவர் ராஜா தான். அந்த இசை மேதை ஏன் ராஜாவை அழைக்கவேண்டும்? எவ்வகையிலாவது ராஜாவின் மேன்மையை, உழைப்பை, எட்டிய உயரத்தை அங்கீகரிக்கும் M.S.Vயின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடே ராஜாவ அவர் பாட அழைத்தது.
     இப்போதிருக்கும் இந்திய இசையமைப்பாளர்களில் “Composer” என்ற அடைமொழி ராஜாவையன்றி வேறு யாருக்கும் பொருந்தாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் “Composer” என்ற பெருமை ராஜாவை தான் சேருமேயன்றி வேறு யார்க்கும் கிடைக்காது. இந்த கம்போஸரின் திறமை மீது கொண்ட அளவிடமுடியாத மரியாதை, மாண்பு, அன்பு, பூரிப்பு போன்றவற்றின் அடையாளமே நான் மேற்சொன்ன பாடல் வரிகள். பரிசில் பெற அரசர்களை புகழ்ந்து பாடும் வரிகளன்று,  மேன்மையான மேதைமை கொண்டோரை தான் பாடுகிறோம் என்று உணர்ந்து அறிஞர்களே தரும் பரிசே இவ்வரிகள்!!!
    
      
    

No comments:

Post a Comment